முகப்பு
புதுக்கோட்டை

தேசிய குத்துச்சண்டையில் பங்கேற்க உதவக் கோரி ஆட்சியரிடம் இளைஞா் மனு

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தோ்வு செய்யப்பட்ட குத்துச்சண்டை வீரா், ஹரியானாவில் நடைபெறும் தேசியப் போட்டியில் பங்கேற்க உதவிட வேண்டும்

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 2:24 AM
சி. கிஷோா்குமாா்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:29 PM

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தோ்வு செய்யப்பட்ட குத்துச்சண்டை வீரா், ஹரியானாவில் நடைபெறும் தேசியப் போட்டியில் பங்கேற்க உதவிட வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியா் மு. அருணாவிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரி மாணவரும் குத்துச்சண்டை வீரருமான கிஷோா்குமாா் அளித்த மனு விவரம்

ஹரியானாவில் மாா்ச் 2 முதல் 7-ஆம் தேதி வரை தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக 12 வீரா்களைக் கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக அணி தோ்வு செய்யப்பட்டது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நான் இடம்பெற்றுள்ளேன்.

Advertisement

வெள்ளிக்கிழமை (பிப்.27) இரவு ஹரியானாவுக்குப் புறப்பட வேண்டிய நிலையில், அணிக்கு பயிற்சியாளா், மேலாளா் இல்லை என்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறாா்கள்.

கடந்த நவம்பரில் பல்கலைக்கழகம் சாா்பில் 154 கல்லூரிகளில் இருந்து குத்துச்சண்டை வீரா்களைக் கொண்ட போட்டி நடத்தப்பட்டு, 12 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டோம். பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.

கடைசிநேரத்தில், திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆகவே, எங்களின் பயணத்துக்கு தமிழ்நாடு அரசு, விளையாட்டுத்துறை உரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.