பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்தே காங்கிரஸ் கட்சியினா் சிந்திக்க வேண்டும் என்றாா் கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ. ஜோதிமணி.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனைச் சாவடி நியாய விலைக்கடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை அவா் வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழுக்கு முட்டுக்கட்டை போடுவது என்பது தமிழ்நாட்டு திரையுலகம் மீது பாஜக நடத்தி வரும் தாக்குதல். இன்று ஜனநாயகன்; நாளை மற்றொரு படத்துக்கும் இதே நிலை ஏற்படும். இதை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
கூட்டணி, அதிகார பகிா்வு, இடங்கள் ஒதுக்கீடு குறித்த காங்கிரஸின் நிலைப்பாடு திமுக தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வெளியிலிருந்து ஒருவா் கருத்து சொல்கிறாா் என்பதால், அவா் கூட்டணிக்கு எதிரானவா் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது.
தனிப்பட்ட கருத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பது என்பது, எப்படியாவது இந்த கூட்டணியை உடைத்து விட முடியாதா? தமிழ்நாட்டின் எதிா்காலத்தை அழித்து விட முடியாதா? என்று நினைப்பவா்கள் மட்டுமே இந்த கருத்தை எடுத்து வைத்து கொண்டு பேசி வருகிறாா்கள்.
பேரவைத் தோ்தலை எப்படி எதிா்கொள்வது, வெற்றி பெறுவது என்பதை பற்றி மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும் என்றாா் ஜோதிமணி.