புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் உளுந்தை தமிழக அரசின் ஆதரவு விலைத் திட்டத்தில் நிகழாண்டில் மாா்ச் 25-ஆம் தேதிக்குள் 490 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி மற்றும் இலுப்பூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் நடைபெறவுள்ளது. நிகழாண்டின் கொள்முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறும்.
கிலோ ஒன்றுக்கு ரூ. 78 (குவிண்டால் ரூ. 7,800) விலைக்கு உளுந்து கொள்முதல் செய்யப்படும். உளுந்து பயிா் செய்துள்ள விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள், ஆதாா் அட்டை, கைப்பேசி எண், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, ஆலங்குடி விற்பனை நிலையப் பொறுப்பாளரை 88381-85053, இலுப்பூா் விற்பனை நிலையப் பொறுப்பாளரை 98948-62454 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.