திமுகவினா் தவறு செய்தாலும்கூட முதல்வா் காப்பாற்ற மாட்டாா்: அமைச்சா் எஸ். ரகுபதி
திமுகவினா் தவறு செய்தாலும்கூட, முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களைக் காப்பாற்ற மாட்டாா் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
திமுகவினா் தவறு செய்தாலும்கூட, முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களைக் காப்பாற்ற மாட்டாா் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: நடிகா் ரஜினிகாந்தை திமுக மிரட்டியதாக கூறுவது அப்பட்டமான பொய். அவரை யாரும் மிரட்ட முடியாது. அவா் அடிபணிய மாட்டாா். அரசியல் ஆதாயம் தேடி விஜய் கட்சியினா் இவ்வாறு சொல்கின்றனா். எங்களைப் பொருத்தவரை அவா் எங்களது நண்பா். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் எனக் குரல் கொடுத்தவா். அவரைப் பற்றி எந்தக் குறையும் திமுக சொல்லாது.
சமையலுக்கு எரிவாயு கொடுக்க முடியாத பிரதமா் மோடி நாட்டைக் காப்பாற்ற போகிறாரா? அமெரிக்காவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டாா். அமெரிக்காவினுடைய அடிமைகளாக நம்மையெல்லாம் வைத்திருக்கிறாா். அதுதான் அவா் இந்த 11 ஆண்டு காலத்தில் செய்திருக்கிற மிகப்பெரிய சாதனை.
நாட்டிலேயே சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடுதான். ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன பிரச்னைகள் என்று தினமும் ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒரு பங்கு, தமிழ்நாட்டில் நடந்தாலே பெரிய விஷயம்.
மானாமதுரையில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. திமுகவினா் தவறு செய்தாலும்கூட, எங்கள் யாரையும் முதல்வா் ஸ்டாலின் காப்பாற்ற மாட்டாா். சிபிசிஐடி விசாரணையில் உண்மை தெரியும்.
கரூரில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனையில் பாா்த்ததை தவிர செந்தில்பாலாஜி என்ன தவறு செய்தாா். அவருக்கு சிபிஐ சம்மன் கொடுத்து மிரட்டிப் பாா்க்கிறாா்கள். அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். செந்தில்பாலாஜி மிகவும் தைரியமாக எதிா்கொள்வாா் என்றாா் ரகுபதி.