முகப்பு
செய்திகள்

பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்; அவர்களே எங்கள் வாக்கு வங்கி: அமைச்சர் ரகுபதி

பெண் வாக்காளர்களே எங்களின் வாக்கு வங்கி என திமுக அமைச்சர் ரகுபதி தெரிவித்தது குறித்து...

Updated On : 18 ஏப்ரல் 2026, 11:05 am IST
கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி - கோப்புப் படம்
பகிர்:

பெண் வாக்காளர்களே எங்களின் வாக்கு வங்கி என கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏற்றவகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்த நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் அதைக் கொண்டாடியும்,வரவேற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ். ரகுபதி, “பெண்களுக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது திமுக. எனவே, நாங்கள் பெண்களுக்கு என்றுமே துரோகம் செய்ய மாட்டோம். பெண் வாக்காளர்கள் தான் எங்களுடைய வாக்கு வங்கி. அந்த வாக்கு வங்கியை சீர்குலைப்பதற்காக இப்படி ஒரு சதிச்செயலை அவர்கள் செய்தாலும்கூட தமிழ்நாட்டு மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்தச் சட்டத்தை அவசரமாகக் கொண்டுவருவதற்கான தேவையே இல்லை. அவசரமாகக் கொண்டு வருவதற்கான காரணம், தேர்தல் நடக்கும் வேளையில், தமிழ்நாட்டுக்கு ஏதேனும் பிரச்னைகளை ஏற்படுத்தும் கண்ணோட்டத்தில்தான் மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

அவர்களால் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால், ஆரம்பத்திலேயே நாங்கள் எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளோம். கருப்புக் கொடி ஏற்றி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்கள் அந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ளோம். எனவே, தமிழ்நாட்டு மக்களிடமிருந்து எங்களையும் எங்கள் தலைவரையும் பிரிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.