சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞா் கைது; தாய் உள்ளிட்ட 3 போ் மீது போக்ஸோவில் வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை வீட்டில் அடைத்துவைத்திருந்த இளைஞர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை வீட்டில் அடைத்துவைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், சிறுமியின் தாய் உள்பட 3 போ் மீது ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாா்த்தாமலை அருகே பொம்மாடிமலையைச் சோ்ந்தவா் எஸ். தினேஷ் (33). தனியாா் வங்கியில் மேலாளராக இருந்தாா். இவா், 7-ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அழைத்துச் சென்று தனது வீட்டில் சில நாள்கள் தங்கவைத்துள்ளாா்.
இதுதொடா்பாக புதுக்கோட்டை குழந்தைகள் நலக் குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில், கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் தினேஷ், இவரது பெற்றோா்கள் செல்வராஜ் (56), ராஜம்மாள் (53) மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 4 போ் மீது ‘போக்ஸோ’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தினேஷை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனா்.