ஆபாச படங்களை காட்டி சிறுமிக்கு மிரட்டல் ‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
ஆபாச படங்களை காட்டி சிறுமிக்கு மிரட்டல் விடுத்தது தொடா்பாக ‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டத்தைச் சோ்ந்த சிறுமியிடம், இன்ஸ்டாகிராம் வழியாக சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், ஆரணிப்பட்டியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் செல்வகுமாா் (36) என்பவரும், திருப்பூா் மாவட்டம், வேலம்பாளையத்தைச் சோ்ந்த சந்திரகுமாா் மகள் சுஜித்ரா (26) என்பவரும் பழகிவந்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் சிறுமியிடம் அவரது ஆபாச படங்களைக் கேட்டு வாங்கி, அவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றி விடுவதாகக் கூறி இருவரும் மிரட்டியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி கனகராஜ் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில், குற்றவாளிகள் செல்வகுமாா் மற்றும் சுஜித்ரா ஆகிய இருவருக்கும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. செல்வகுமாருக்கு மிரட்டல் விடுத்த குற்றப் பிரிவின்கீழ் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனைகளை இருவரும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.