தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீவிர வயிற்றுப்போக்குக் கட்டுப்பாட்டு சிறப்பு முகாம் தொடக்கம்

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்குக் கட்டுப்பாட்டுச் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் இந்த முகாமைத் தொடக்கி வைத்த ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்குக் கட்டுப்பாட்டு முகாம் திங்கள்கிழமை (ஜூன் 19) முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஐந்து வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உப்புச் சர்க்கரை பொட்டலம் வழங்கப்படும். அத்துடன் வயிற்றுப்போக்குக் கண்ட குழந்தைகளுக்கு 14 நாட்களுக்கு சிங்க் மாத்திரை வழங்கப்படும்.
மேலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வயிற்றுப்போக்குக் கண்ட குழந்தைகளுக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும், கைக்கழுவும் முறைப் பற்றிய நலக் கல்வியையும், வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும், கழிப்பறையைப் பயன்படுத்தும் வழக்கம் பற்றியும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வழங்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் நடைபெறும் இந்த முகாமில் உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலம் வழங்கப்படவுள்ளது.
இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்கு உள்பட்ட 2,36,000 குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை பொட்டலம் வழங்கவுள்ளனர் என்றார் ஆட்சியர்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஐ. சுப்பிரமணிய ஜெயசேகர்,  சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஏ. சுப்பிரமணி, மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜ், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். கோபிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT