முகப்பு
தஞ்சாவூர்

டெங்கு: ரயில்வேக்கு நோட்டீஸ் வழங்க ஆட்சியர் உத்தரவு

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டெங்கு தடுப்பு தொடர்பாக புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது தூய்மையாகப் பராமரிக்கக் கூறி ரயில்வே

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டெங்கு தடுப்பு தொடர்பாக புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது தூய்மையாகப் பராமரிக்கக் கூறி ரயில்வே நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மாநகராட்சி அலுவலர்களிடம் ஆட்சியர் உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நாள்தோறும் காலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்படி, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தார்.இந்நிலையத்தில் உள்ள உணவகம், தேநீர் கடை, தண்டவாளம், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்குமிடம், தண்ணீர் தொட்டி உள்ளிட்டவற்றை ஆட்சியர் பார்வையிட்டார்.
அப்போது, நிலையத்தில் உள்ள மழைநீர் வடிகால்களில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது தெரிய வந்தது. இதை உடனடியாகச் சுத்தம் செய்யுமாறும், பயணிகள் தூக்கி எறியும் டீ கப், பாக்கெட்டுகளை உடனுக்குடன் அகற்றிச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் நிலைய மேலாளரிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நிலையத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத் தொட்டி மீது போடப்பட்டுள்ள மேற்கூரையை மாற்றி கொசுக்கள் உள்ளே செல்லாத
விதமாக சிமெண்ட் பலகை அமைக்குமாறும், தொட்டியை முறையாகச் சுத்தம் செய்து பராமரிக்குமாறும் ரயில்வே நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜிடம் ஆட்சியர் உத்தரவிட்டார். பின்னர்,  தலைமை அஞ்சலகத்தின் எதிரில் உள்ள கடைகளிலும், முன்னாள் படைவீரர் அலுவலகத்திலும் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின் போது, கோட்டாட்சியர் சி. சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →