தஞ்சாவூர்

ஹரி கதை விற்பன்னர் தஞ்சை டி.ஆர். கமலா மூர்த்தி காலமானார்

DIN

ஹரி கதை விற்பன்னர் தஞ்சை டி.ஆர். கமலா மூர்த்தி (88) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலை அவரது இல்லத்தில் காலமானார்.
கடலூர் மாவட்டம்,  சிதம்பரத்தில் 1930 ஆம் ஆண்டு பிறந்தவர் கமலா மூர்த்தி. திருவையாறு அண்ணாசாமி பாகதவரின் முதன்மைச் சீடரான கமலா மூர்த்தி,  தனது 9-ஆவது வயதில் ஹரி கதை நிகழ்த்தத் தொடங்கினார். இவர் ஹரி கதையை மரபுப்படி நிகழ்த்துவதில் வல்லவர். 
அக்காலத்தில் ஆண்கள்தான் ஹரி கதை நிகழ்த்தி வந்தனர். அப்போது, பெண்களில் மூன்று பேர் ஹரிகதை நிகழ்த்தத் தொடங்கினர். அப்பெண் மும்மூர்த்திகளில் கமலா மூர்த்தியும் ஒருவராகத் திகழ்ந்தார்.
இவர் தனது முதிய வயதிலும் அக்கலையைப் பலருக்கும் சொல்லிக் கொடுத்து, அவர்கள் புகழின் உச்சிக்குச் செல்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும், தனது சொந்த பேத்தியான சுசித்ரா பாலசுப்பிரமணியம் இக்கலையில் சிறந்து விளங்குவதை அவர் பார்த்து மகிழ்ந்தார்.
நல்ல குரல் வளமும், இசையில் நல்ல தேர்ச்சியும் இருந்ததால் கமலா மூர்த்தியால் ஹரிகதையில் சிறந்த இசையைக் கொடுக்க முடிந்தது. இடையிடையே, சுவாரசியமான புராண, இதிகாச கதைகளை இவர் சொல்லும்போது அவற்றை நேரில் பார்த்து ரசிப்பது போன்ற உணர்வு கேட்போருக்கு ஏற்படும். 
ஒரு ராகத்தைத் தொடங்கும்போதே அந்த ராகத்தின் சிறப்பும் வெளிப்படும் வகையில் அவர் பாடுவதும், அவர் இசையின் மேன்மையும் கேட்போர் மனங்களை அதில் லயிக்க வைத்துவிடும். 
தொடர்ந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஹரி கதை நிகழ்ச்சிகளை நடத்தினார்.  
இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, சென்னை சங்கீத வித்வத் சபையின் டிடிகே விருது, புதுதில்லி சங்கீத நாடக அகாதெமி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் திருவையாறிலும், பின்னர் தஞ்சாவூரிலும் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை பத்மாவதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலை காலமானார். 
இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் 2001 ஆம் ஆண்டில் மறைந்தார். இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். தொடர்புக்கு 97909 33529. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT