"மூல திராவிட மொழியில் தமிழும், மலையாளமும் தோன்றின'
மூல திராவிட மொழியில் தமிழும், மலையாளமும் தோன்றின என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
மூல திராவிட மொழியில் தமிழும், மலையாளமும் தோன்றின என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
இப்பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் மலையாள உறவுகள் - பன்முக நோக்கு என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:
மொழிகளை ஒப்பு நோக்குதல் என்பது மொழி, பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றில் ஆய்வு செய்கிறபோது அடிப்படையில் ஒன்றாக அமைந்திருக்கிறது. ஆனால், வாழ்வியல் ரீதியாக இந்த ஒப்புநோக்குதல் இருக்கக்கூடாது என்பதும் அடிப்படையாக இருக்கிறது.
ஆய்வில் ஒப்புநோக்குதல் என்பது அவசியமாகிறது. மொழி என்பது நம் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கிற நிலையில், பண்பாட்டின் குறியீடாக இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு இனம் அதனுடைய பண்பாடு, அது எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பதைக் காட்டுவதுதான் மொழி.
எனவே, இலக்கியம், இலக்கணம், அகராதியில் ஒரு மொழியின் சிறப்பு இருக்கலாம். ஆனால், பண்பாட்டு நிலையில்தான் மொழியின் முக்கியத்துவத்தை உணர முடியும். எனவே, மொழி இல்லாமல் பண்பாடு, இனம் இல்லை. அதுபோல பண்பாடு இல்லாமல் இனம் இல்லை என்கிற நிலையிலேதான் மொழிகளின் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். மொழி என்பது உணர்ச்சிகளின் ரீதியாக மட்டுமல்லாமல், உணர்வு, ஆய்வின் வழியாக எப்படியெல்லாம் வளர்த்தெடுக்கலாம் என்ற சிந்தனையுடைவர்கள்தான் ஆய்வாளர்கள். தமிழும், மலையாளமும் மூல திராவிட மொழியில் தோன்றிய சகோதரிகள். தமிழுக்கும் மலையாளத்துக்கும் பல நிலைகளில் உறவு உண்டு. நாகரிகத்தின் அடிப்படையில் சில வேறுபாடுகளைப் பார்க்கலாம். உணவு, உடை, பழக்கவழக்கங்களில் வேறுபாடு இருக்கலாம். எனினும், பண்பாட்டின் அடிப்படையில் தமிழும், மலையாளமும் பல நிலைகளில் ஒன்றுபட்டுள்ளன என்றார் துணைவேந்தர். குப்பம் திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன், திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பா. ஆனந்தகுமார், கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியர் (ஓய்வு) பீ. நசீம்தீன், கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் ப. ஜெயகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப் புல முதன்மையர் இரா. முரளிதரன், துறைத் தலைவர் ச. கவிதா, உதவிப் பேராசிரியர் சி. சாவித்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.