தஞ்சாவூர்

சோழ நாட்டில் பெளத்த சமயம் தழைத்திருந்தது

சோழ நாட்டில் பெளத்த சமயம் தழைத்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்றார் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளரும், பெளத்த ஆய்வாளருமான பா. ஜம்புலிங்கம்.

DIN

சோழ நாட்டில் பெளத்த சமயம் தழைத்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்றார் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளரும், பெளத்த ஆய்வாளருமான பா. ஜம்புலிங்கம்.
தஞ்சாவூரில் ஏடகம் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஞாயிறு முற்ற மாதாந்திரச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சோழ நாட்டில் பெளத்தம் என்ற தலைப்பில் அவர் பேசியது:
வரலாற்றறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி பெளத்தமும் தமிழும் (1940) என்ற நூலில் சோழ நாட்டில் 10 இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக 1993 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிற தொடர் களப்பணியின்போது அந்த 10 சிலைகள் உள்ளிட்ட ஏறத்தாழ 70 புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டது. 
பல்வேறு காலகட்டங்களில் தழைத்திருந்த பெளத்த சமயத்துக்குப் பக்தி இயக்கக் காலத்தில் பின்னடைவு ஏற்பட்டபோதும், சோழர் காலத்தில் நல்ல நிலையில் பரவியிருந்தது. இதை இங்கு காணப்படுகிற அக்காலத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகள் தெளிவுபடுத்துகின்றன. 
கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் காணப்படுகின்ற கி.பி. 1580 ஆம் ஆண்டைச் சேர்ந்த செவ்வப்ப நாயக்கர் காலத்துக் கல்வெட்டின் மூலமாக கும்பகோணம் அருகே திருவிளந்துறை என்ற இடத்தில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்று கிடைத்தது. இந்த 25 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது தனியாகவும், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்கள் துணையுடனும் 15 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும், ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் புதிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது.
சோழ நாட்டில் பரவலாகக் காணக் கிடைக்கிற புத்தர் சிலைகள் மூலம் பெளத்த சமயம் இப்பகுதியில் தழைத்திருந்த நிலையை எடுத்துரைக்கும் சான்றுகளாக உள்ளன. புத்தரை ரிஷி, செட்டியார், சமணர், அமணர், சிவனார், சாம்பான், பழுப்பர், நாட்டுக்கோட்டை செட்டியார் என பல இடங்களில் அழைக்கின்றனர். 
மங்கலம், ஒகுளூர், பட்டீசுவரம், புஷ்பவனம், புதூர், புத்தமங்கலம், விக்ரமம், விக்ரமங்கலம், கிள்ளியூர் உள்ளிட்ட பல இடங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சில இடங்களில் நேர்த்திக்கடனாக முடியெடுத்தல், தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு போன்ற நாள்களில் சிறப்பு பூசைகள் செய்கின்றனர். சில இடங்களில் புத்த பூர்ணிமாவின்போது சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி பூஜைகள் நடத்துகின்றனர். சோழ நாட்டில் பெளத்த சமயம் போற்றப்படுவதை இதன்மூலம் உணர முடிகிறது என்றார் ஜம்புலிங்கம்.
நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பே.வே. நவேந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக ஆதிபராசக்தி தணிக்கைக்குழு உறுப்பினர் கு. சிவராஜா வரவேற்றார். டி. பவானி நன்றியுரையாற்றினார். இராச. பாரதிநிலா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"ஓடாத ஓட்டை என்ஜின் ஆட்சி": முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியா? பாஜக - NDA ஆட்சியா?

சிப்லா: 3வது காலாண்டு நிகர லாபம் 57% சரிவு!

எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது! ஆனால் இணைந்ததும் அதை மறந்துவிட்டோம்! EPS, TTV கூட்டாக பேட்டி

2-வது டி20: இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

SCROLL FOR NEXT