கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் அபிராமி சுந்தரேஸ்வரர் (பெட்டி காளியம்மன்) கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பல லட்ச ரூபாய் மதிப்பில் அறநிலையத்துறை, உபயதாரர்கள் மூலம் கோயில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு, அண்மையில் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை 6 நாள்களுக்கு 8 கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கென கோயிலுக்கு வடக்கு பகுதிகளில் 105 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு கோயில்களிலிருந்து வந்திருந்த 150 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர். மேலும் வேத, திருமுறை பாராயணம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை செய்யப்பட்டு கோயில் ராஜ கோபுரம், சுவாமி, அம்பாள் விமானங்கள் மற்றும் பரிவார சன்னதிகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. யாகசாலை மற்றும் கும்பாபிஷேகத்தில் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.