அலுவலர்களைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் பகுதியில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை பரிசீலனை செய்யாமல், இறுதி வேட்பாளர் பட்டியலையும்
கும்பகோணம் பகுதியில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை பரிசீலனை செய்யாமல், இறுதி வேட்பாளர் பட்டியலையும் வெளியிடாத தேர்தல் நடத்தும் அலுவலர்களைக் கண்டித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட 16 கூட்டுறவுச் சங்கங்களுக்கு கடந்த 26 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வரும் ஏப். 2 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 26 ஆம் தேதி பிற்பகலுக்கு பின்னர் அந்தந்தக் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் நாள் என்பதால், வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோர் காலை முதல் சங்கத்தில் காத்திருந்தனர். ஆனால் மேற்கண்ட 16 சங்க கட்டடத்திலும் மனுக்கள் பரிசீலனை நடைபெறவில்லை.
இதையடுத்து புதன்கிழமை வேட்புமனுக்கள் திரும்பப் பெறுவதும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். ஆனால் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அம்மாசத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன் திமுக கிழக்கு ஒன்றிய செயலர் தி. கணேசன் தலைமையிலும், தாராசுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன் திமுக மேற்கு ஒன்றிய செயலர் இரா. அசோக்குமார் தலைமையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல, பட்டீஸ்வரம், உடையாளூர் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் முன்பும் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.