"முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைகிறது'
உலகளவில் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
உலகளவில் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முப்பரிமாண அச்சுத் தொழில் வளர்ப்பகத் தொடக்க விழா, கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழாவில் அவர் பேசியது:
தஞ்சாவூர் பெரியகோயில் சிற்பங்களின் சொத்து மையமாக மட்டுமல்ல; நம்முடைய கட்டடக் கலை சாதனையின் உச்சத்தையும் பறைசாற்றுகிறது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட அறிவியல், கட்டடக்கலை, கட்டுநர்களின் தேர்ந்த சாதனையைக் காட்டுகிறது. பிற்காலத்தில் இசையில் தஞ்சாவூர் ஈடுஇணையற்ற நகரமாக உருவானது. இதேபோல, ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் கொண்ட சரபோஜி மன்னரின் சரசுவதி மகால் நூலகம் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. இவையெல்லாம் தஞ்சாவூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற சிறப்பம்சத்தைக் காட்டுகிறது.
சண்முகா பொறியியல் கல்லூரியாக 1984 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட சாஸ்த்ரா இப்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்ந்துள்ளது. இதில், பொறியியல், அறிவியல், மேலாண்மை, சட்டம், கலை ஆகியவற்றில் முனைவர் பட்டம் வரை வழங்கப்படுகிறது. மேலும், மேம்பட்ட கணினி மற்றும் தகவல் செயலாக்கம், மெக்கடிரானிக்ஸ், நானோ தொழில்நுட்பம், மேம்பட்ட உயிரி பொருள் ஆகிய சாதனை வரிசையில் இப்போது தொழில்நுட்ப வணிகத் தொழில் வளர்ப்பகம் தொடங்கப்பட்டிருப்பது இப்பல்கலைக்கழகத்தின் சாதனை பட்டியலில் மற்றொரு மைல்கல்.
அறிவுசார் உலகப் பொருளாதாரத்தில் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான புத்தாக்கம், தொழில்முனைவுக்கும் இந்தத் தொழில் வளர்ப்பகம் உதவியாக இருக்கும். இந்த வளர்ப்பகம் முப்பரிமாண (3டி) அச்சு, மின்னணுக் கருவிகளை இணைக்கும் இணையத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக இருக்கும். இதுபோன்ற வளர்ப்பகம் கல்வி நிறுவனத்தில் முதல் முதலாக நிறுவப்பட்டுள்ளது. இது, மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை உதவியுடன் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளாக முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. உலகளவில் பெரும்பாலான நிறுவனங்கள் முப்பரிமாண அச்சு இயந்திரங்களை உற்பத்தி செய்கின்றன.
முப்பரிமாண அச்சுச் சந்தையின் மதிப்பு 2021 ஆம் ஆண்டில் 10.8 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இந்தியாவில் முப்பரிமாண அச்சு சந்தையின் மதிப்பு 79 மில்லியன் டாலராக இருக்கும்.
மருத்துவம், கட்டடக்கலை, தானியங்கி, தொழில், விண்வெளி, ராணுவம், இதர துறைகளில் முப்பரிமாண அச்சு முதன்மையாகப் பயன்படுகிறது என்றார் ஆளுநர்.
பின்னர், சிறந்த மாணவர்களான 1,246 பேருக்கு ரூ. 1.60 கோடியில் கல்வி உதவித்தொகையை ஆளுநர் வழங்கினார். மேலும், முப்பரிமாண அச்சு தொழில் வளர்ப்பகத்தைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன், சென்டாப் இயக்குநர் எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழக ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.