ஆகஸ்ட் புரட்சி நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது'
ஆகஸ்ட் புரட்சி நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம்.
ஆகஸ்ட் புரட்சி நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம்.
தஞ்சாவூரில் ஏடகம் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஞாயிறு முற்ற மே மாதச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியது:
இந்திய விடுதலைப் போராட்டத்தின் இறுதி நிலையாகவும், இந்தியர்களின் விடுதலை வேட்கைக்கு கிடைத்த விடையாகவும் அமைந்தது இந்த ஆகஸ்டு புரட்சி. 1942, மார்ச் கிரிப்ஸ் குழுவின் பிரகடனம் காங்கிரஸ் காரிய கமிட்டியால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், இப்புரட்சிக்கான வித்தினை இட்டது. இந்தப் புரட்சி அக்காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டபோதிலும், இந்தியர்களின் மனதில் தேசிய உணர்வை மிகுவித்தது. அத்தகைய பெயர் பெற்ற ஆகஸ்ட் புரட்சியைக் கடந்த ஆண்டு 75 ஆம் ஆண்டு விழாவாகக் இந்திய அளவில் கொண்டாடப்படாமல் இருந்தது வேதனைக்குரியது.
இந்திய அரசு இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுத்து விழாக்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அகிம்சையையே உச்சரித்த மகாத்மா காந்தியின் எண்ணத்தை மாற்றி அமைத்தது இந்த ஆகஸ்டு புரட்சியே.
நாட்டின் பல பகுதிகளில் விடுதலை உணர்வைத் தூண்டிய அப்புரட்சியின் வீச்சு தமிழகத்தில் அதிகமாகக் காணப்பட்டது. தமிழகத்தில் கோயம்புத்தூரில் சூலூர் விமான நிலையம் இப்புரட்சியின் முதல் தளமாக அமைந்தது. அக்காலகட்டத்தில் ராணுவத் தளமாக இயங்கி வந்த சூலூர் விமான நிலையம் கோவையைச் சேர்ந்த பஞ்சாலைத் தொழிலாளர்களால் கொளுத்தப்பட்டது. சீர்காழியில் உப்பனாற்றில் பாலம் தகர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வேதாரண்யத்தில் உப்பளம் கைப்பற்றப்பட்டது. ராமநாதபுரம், குலசேகரபட்டினம், ராசபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் புரட்சி பெரும் வடிவில் உருவெடுத்தது. இப்புரட்சியின்போது பல இந்தியர்கள் இன்னுயிர் ஈந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற வரலாறுகள் நம் வரலாற்றுப் பக்கங்களில் முழுமையாக இடம்பெறாமலும், முக்கியத்துவம் பெறாமலும் உள்ளன. ம.பொ. சிவஞானம் எழுதிய விடுதலைப்போரில் தமிழகம் என்ற நூல் தமிழகத்தில் விடுபட்ட வரலாற்றுப் பக்கங்களை நம் முன் கொண்டு வந்தது.
இந்த நூல் வெளிவந்திருக்காவிட்டால் தமிழக வரலாற்றில் தமிழர்களின் பங்களிப்பை எவரும் உணர்ந்திருக்க முடியாது.
இத்தலைமுறைக்கும், இனி வரும் தலைமுறைகளுக்கும் ஆகஸ்டு புரட்சியின் பெருமையை எடுத்துச்செல்லவேண்டியது நம் கடமை என்றார் விஜயராமலிங்கம். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் பு. இந்திரா காந்தி தலைமை வகித்தார். ஏடக நிறுவனர் மணி. மாறன், பொருளாளர் கோ. ஜெயலட்சுமி, இராச. பாரதிநிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.