காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள்
உச்ச நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் உள்ளன என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் உள்ளன என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உச்ச நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் உள்ளன. ஒன்று, கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக் கூறப்படாதது.
கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினருக்கு ஆணையிட்டுத்தான் செயல்படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு தனது அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என ஆணையிட்டால் என்னாகும்?.
ஏற்கெனவே பலமுறை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், அதைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்துள்ளது. மேலும், கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் திறந்து விட முடியாது என தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது ஊனம், ஏதாவது மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும்.
ஆணையத்தின் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் என மொத்தம் 5 பேர் மத்திய அரசின் அதிகாரிகள்.
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும் தலா ஒருவர் வீதம் நான்கு பேர்.இதில் கர்நாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்தால், மத்திய அரசின் 5 உறுப்பினர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே நடப்பர்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து, இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது மத்திய அரசு. காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பாஜக அரசாக இருந்தாலும் மத்திய அரசின் நிலைபாடு எப்போதும் தமிழகத்திற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான்.
இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கர்நாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக மத்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்புள்ளது.
இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற மத்திய அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா? என்ற கேள்விகளுக்கு இல்லை என்ற விடையே கிடைக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.