கிருஷ்ண ஜயந்தி விழா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
கிருஷ்ண ஜயந்தி விழாக்குழுவின் சார்பில் மாணவ, மாணவிகளுக்காக 33 வது ஆண்டாக நடைபெற்ற
கிருஷ்ண ஜயந்தி விழாக்குழுவின் சார்பில் மாணவ, மாணவிகளுக்காக 33 வது ஆண்டாக நடைபெற்ற தனித்திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு கடந்த 2 மாதமாக பல்வேறு தேதிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, மாறுவேடப் போட்டி என பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு கும்பகோணம் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ரோட்டரி உதவி ஆளுநர் செளமியா நாராயணன், ரோட்டரி சங்க தலைவர் திருமலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் சிறப்புரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசியுரையாற்றினார்.
விழா ஏற்பாடுகளை விழாக் குழுத்தலைவர் சந்திரபிரபு உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.