அதிராம்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ கண்ணாடி பாறை மீன்கள்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகிலுள்ள மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடல் பகுதியில் பிடிபட்ட 28 கிலோ எடையுள்ள 2 அபூர்வ கண்ணாடி பாறை மீன்கள் ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினம் கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை மீன் வியாபாரிகள் கிலோ ரூ.350 வரை விற்பனை செய்தனர்.
இதுகுறித்து மீன் வியாபாரி முகமது முகைதீன் கூறியது: பாறை மீன்களில் 100 க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இங்கு விற்பனைக்கு வந்திருப்பது அபூர்வ வகை கண்ணாடி பாறை மீன்கள் ஆகும். இந்த மீன்கள் பெரும்பாலும் ஆழ்கடலில் மட்டுமே வசிக்கும். மீனவர்கள் வலையில் அரிதாகவே சிக்கும் இந்த மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்றார்.