சலூன் கடை அடித்து உடைப்பு: வழக்குரைஞர் உள்பட 4 பேர் மீது வழக்கு
பேராவூரணி சேது சாலையில் சலூன் கடையை அடித்து சேதப்படுத்தி, கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்குரைஞர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பேராவூரணி சேது சாலையில் சலூன் கடையை அடித்து சேதப்படுத்தி, கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்குரைஞர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பேராவூரணி சேது சாலையில் சலூன் கடை நடத்தி வருபவர் வன்மீகநாதன்(38). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மோதி கமலம் என்ற பெண் உயிரிழந்தார்.விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் அதிவேகமாக செல்லும் காட்சி இவரது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இவரது கடையின் வாடிக்கையாளரான சமூக ஆர்வலர் உதயகுமார் என்பவர் கண்காணிப்பு கேமராவில் இருந்த காட்சியை பதிவிறக்கம் செய்து தனது முகநூலில் பொதுநல நோக்கத்துடன் வெளியிட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய அசாருதீன் என்பவரின் வழக்குரைஞர் வெங்கடேஷ்வர் இந்த சம்பவம் குறித்த விடியோவை, உதயகுமாரிடம் ஏன் கொடுத்தாய் என்று கேட்டு, வன்மீகநாதனை சனிக்கிழமை காலை மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு, வெங்கடேஷ்வரின் நண்பர்களான பழைய பேராவூரணியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பொன்காட்டையை சேர்ந்த சந்துரு, நாட்டாணிக்கோட்டையை சேர்ந்த பைசல் ஆகிய மூன்று பேரும் ஆயுதங்களுடன் சென்று சலூன் கடையின் முகப்பு கண்ணாடி, வீல் சேர் உள்ளிட்ட அனைத்து தளவாடப்பொருட்களையும் அடித்து உடைத்துவிட்டு, சாதியின் பெயரைக் கூறி ஆபாசமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தனராம்.
இந்த தாக்குதலில், கண்ணாடி கதவுகள், குளிர்பதனப்பெட்டி, ஏர்கண்டிஷன் இயந்திரம், சொகுசு இருக்கை என கடைமுழுவதும் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமானது.சேதமதிப்பு ரூ 3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான வழக்குரைஞர் வெங்கடேஷ் வர் உள்ளிட்ட 4 பேரையும் தேடிவருகின்றனர்.