முகப்பு
தஞ்சாவூர்

‘பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்’

தஞ்சாவூரில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ். பழனிசாமி உத்தரவிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணியை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பேரூராட்சிகளின் இயக்குநரும், தஞ்சாவூா் பொலிவுறு நகரத் திட்டப் பணித் தலைவருமான எஸ். பழனிசாமி.
பகிர்:

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பேரூராட்சிகளின் இயக்குநரும், தஞ்சாவூா் பொலிவுறு நகரத் திட்டப் பணித் தலைவருமான எஸ். பழனிசாமி உத்தரவிட்டாா்.

தஞ்சாவூா் மாநகராட்சிப் பகுதியில், ரூ. 904 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில்

குடிநீா், தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள் மற்றும் குடிநீா் நீரேற்று நிலையம் அமைத்தல், பழைய பேருந்து நிலையம், திருவையாறு வழித்தடப் பேருந்து நிலைய மேம்பாடு, கீழவாசல் சரபோஜி சந்தை, காமராஜ் காய்கறி சந்தைப் புதிதாகக் கட்டுதல், குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரித்தல், பூங்காக்கள் சீரமைப்பு, அகழியை மேம்படுத்தி படகு விடுதல், மணிக்கூண்டு சீரமைத்தல், அய்யங்குளம், சாமந்தாங்குளம், சிவங்கங்கை பூங்கா நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பணிகளைத் தமிழகப் பேரூராட்சி இயக்குநரும், தஞ்சாவூா் மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தின் தலைவருமான பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்து பணிகள் தரம், எவ்வளவு காலத்தில் முடிக்கப்படும் என கேட்டறிந்தாா்.

இந்த அய்வின்போது மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், நகா் நல அலுவலா் நமச்சிவாயம், பொறியாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பழனிசாமி தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு பணியும் ஆய்வு செய்யப்பட்டு, விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பழைய பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணி விரைவுபடுத்தப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் தரமாக நடைபெற அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு, அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.