இந்தியத் திருநாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் முருகப்பெருமானை கார்த்திகேயன் என்றும், காங்கேயன் எனவும் குறிப்பிட்டுப் போற்றுவர்.
கார்த்திகை விண்மீன் திகழும் நாளில் அவதரித்தவன் என்பதாலும், சிவபெருமானின் நெற்றியிலிருந்து தோன்றிய அனற்பிழம்பு கங்கை நதியில் குளிர்ந்து, பின்பு சரவணப் பொய்கையில் அறுமுகப் பெருமானாக அவதரித்தவன் என்பதாலும் மேற்குறித்த பெயர்களால் குறிக்கப் பெறுகின்றான்.
மேலும், வடபுலத்தில் சில மாநிலங்களில் கந்தனைப் பிரமச்சாரியாகவும், தேவசேனா என்ற இந்திரன் மகளை மனைவியாகக் கொண்டவனாகவும் கொண்டு திருமேனிகள் எடுத்து வழிபடுகின்றனர். தமிழ்நாட்டில் குமரனை தமிழ்க் கடவுளாகப் போற்றுவதோடு, தேவ மகளான தேவ சேனையையும், தமிழ்நாட்டுக் குற மகளான வள்ளியையும் மணந்தவன் என்ற கோல நிலையில் வழிபடுவதை மரபாகக் கொண்டுள்ளனர். தஞ்சைப் பெரியகோயிலில் வள்ளித் திருமணக் காட்சிக்கே சிறப்பிடம் தந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கச்சியப்ப சிவாச்சாரியார் காஞ்சிபுரத்தில் எழுதி, குமர கோட்டத்தில் அரங்கேற்றிய கந்தப் புராணம் எனும் தமிழ் நூலில் வள்ளித் திருமணம் பற்றிய விரிவான செய்திகள் கூறப்பெற்றுள்ளன. இந்நூல் எழுதப் பெறுவதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் எழுப்பப்பெற்ற ராஜராஜேச்சரம் என்ற பெரியகோயிலின் கிழக்கு இரண்டாம் கோபுரத்தில் மாமன்னன் முதலாம் ராஜராஜன், வள்ளித் திருமணக் காட்சிகளைச் சிற்பங்களாக இடம்பெறச் செய்து முருகப்பெருமானைப் போற்றியுள்ளார்.
ராஜராஜன் திருவாயில் என அழைக்கப்பெறும் அக்கோபுரத்தின் அடித்தளப்பகுதியில் முதற் காட்சியாக நடுவே முருகப்பெருமான் நிற்க ஒருபுறம் தேவசேனையும், மறுபுறம் வள்ளியும் நிற்கும் எழில்மிகு காட்சி புடைப்புச் சிற்பமாக இடம் பெற்றுள்ளது. இக்காட்சியை அடுத்து இரண்டு பகுதிகளாக நான்கு அடுக்கில் ஒரு பெரிய சிற்பத் தொகுதி இடம் பெற்றுள்ளது.
இந்த இரண்டாம் பகுதியின் கீழடுக்கில் தொடங்கி முதல் பகுதியின் கீழடுக்கில் கதை நிறைவு பெறும் வகையில் சோழநாட்டுச் சிற்பிகள் சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். இரண்டாம் பகுதியின் கீழடுக்கில் முருகன் வேடுவன் வடிவில் அம்புடன் சென்று வில் தொடுக்கும் காட்சியுள்ளது. இங்கு மூன்று நிலைகளில் வேடுவனாக முருகப்பெருமான் காணப்பெறுகிறார்.
அடுத்த காட்சியில் யானை மீது முருகன் ஏறிச் செல்ல வள்ளி பயந்து கையுயர்த்தி கூக்குரலிடும் காட்சியுள்ளது. அதனை அடுத்த மூன்றாவது அடுக்கில் யானை அருகில் முருகன் வேடுவனாக நிற்க, யானை துதிக்கையை தூக்கியவாறு வள்ளியை மிரட்ட அருகே செல்கின்றது. வள்ளி கையுயர்த்தி கந்தனாகிய வேடுவனை அழைக்கின்றாள். நான்காவதாகத் திகழும் மேலடுக்கில் ஆசன மொன்றில் வள்ளி அமர்ந்திருக்க அவளை நோக்கிக் குடையுடன் தாடியுடைய கிழவர் ஒருவர் வேகமாகச் செல்கின்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
முதற் பகுதியின் மேலடுக்கில் முருகன் வேடுவர் கோலத்தில் காணப் பெறுகின்றார். அதற்குக் கீழாகவுள்ள இரண்டாம் அடுக்கில் வள்ளி ஆசனத்தில் அமர்ந்துள்ளாள். எதிரே வில் அம்பு ஏந்தியவராக முருகப்பெருமான் வேடுவன் கோலத்தில் காணப்பெறுகின்றார். இதற்குக் கீழாகவுள்ள மூன்றாம் அடுக்கில் நாம் முன்னர் கண்ட வள்ளி தேவ சேனையுடன் நிற்கும் முருகனின் திருவடிவம் இடம் பெற்றுள்ளது. கீழேயுள்ள நான்காம் அடுக்கில் மயில் காணப் பெறுகின்றது. வள்ளி திருமணக் காட்சியைக் காட்டி நிறைவாக இருபெரும் தேவியருடன் கந்தன் காட்சி தருவதோடு இச்சிற்பத் தொகுதி நிறைவு பெறுகின்றது. தமிழ்நாட்டில் வள்ளித் திருமணக் காட்சியைக் காட்டும் காலத்தால் முந்திய சிற்பப் படைப்பு இதுவேயாகும்.
அருணகிரியார் தஞ்சைக் கோயிலுக்கு வழிபாட்டிற்கு வந்த காலகட்டத்தில் திருச்சுற்று மாளிகையில் இருந்த முருகன் திருமேனியை முன்னரே பகைவர் அழித்தமையால், அங்கு அத்திருமேனி இடம் பெற்றிருக்கவில்லை. தற்போதுள்ள முருகன் கோயில், அருணகிரியார் காலத்திற்குப் பின்பு நூறாண்டுகள் கழித்து தஞ்சை நாயக்க அரசர் செவ்வப்பநாயக்கரால் எடுக்கப்பெற்றதாகும். உள்ளே முருகன் இடம் பெறாமையால் இங்கு நாம் முன்னர் கண்ட இராஜகோபுரத்து சிற்பக் காட்சியையே அவர் தரிசித்து திருப்புகழ் பாடியுள்ளார். அவர் பாடிய திருப்புகழ் பாடலில், முருகப் பெருமானை "குறத்தி துஞ்சுமார்பா" என விளித்து, "கஞ்சவன் வாசவன் மேவி வாழ்பதிக்கு உயர்ந்த தஞ்சை மாநகர் ராஜகோபுரத்து அமர்ந்த பெருமாளே' எனப் பாடியுள்ளார்.
சோழப் பேரரசன் ராஜராஜன் காலத்தில் அப்பெருமன்னனின் கொடையாக அக்கோயிலுக்கு அவன் அளித்த செப்புத் திருமேனிகள் பற்றி அவ்வாலயத்து கல்வெட்டுக்கள் விரிவுற கூறுகின்றன. அதில் அவ்வேந்தன் செய்தளித்த முருகப்பெருமான் செப்புத் திருமேனி பற்றிய கல்வெட்டு பின்வருமாறு உள்ளது.
"ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீராஜராஜதேவர் உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில் யாண்டு இருபத்தொன்பதாவது வரை எழுந்தருள்வித்த செப்புத் திருமேனி. உடையார் கோயிலில் முழத்தால் அளந்து கல்லில் வெட்டின. பாதாதி கேஸாந்தம் இருபதிற்று விரலேய் ஐஞ்சு தோரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தம் உடையராகக் களமாக எழுந்தருள்வித்த சுப்பிரமணிய தேவர் திருமேனி ஒருவர். இவர் ரத்நநியாஸஞ் செய்து எழுந்தருளி நின்ற மூவிரல் உசரத்து பத்மம் ஒன்று. பதிற்று விரல் அகலத்துப் பதின் ஒருவிரல் நீளத்து ஐய்விரலேய் நான்கு தோரை உசரத்து பீடம் ஒன்று மும்முழமே ஐய்விரலே ஆறு தோரை சுற்றிற் கனமாகச் செய்த பிரபை ஒன்று" என்பதே அக்கல்வெட்டு வாசகமாகும்.
அப்பேரரசன் வடித்துத் தந்த அந்தச் செப்புத் திருமேனி தற்போது அந்தப் பெருங்கோயிலில் இடம் பெறாமல் மறைந்துவிட்டது. இராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்து சிவாலயத்திற்கு என செய்தளித்த அற்புதமான முருகப்பெருமான் செப்புத் திருமேனி இன்றும் அவ்வாலயத்தின் வழிபாட்டில் திகழ்கின்றது. தஞ்சையில் திகழ்ந்த திருமேனியை இழந்த நமக்கு கங்கை கொண்ட சோழபுரத்து திருமேனியின் காட்சி ஆறுதல் அளிப்பதாகும்.
பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சையின் ஆட்சியாளனாக விளங்கிய செவ்வப்ப நாயக்கர் தஞ்சைக் கோயில் வளாகத்தினுள் எடுத்த கந்த கோட்டம் எனும் கற்கோயில் அரிய ஒரு படைப்பாகும். உன்னதமான கலை வேலைப்பாடுகள், கல்லாலான கொடுங்கை அமைப்பு, செப்புச் சிலை போன்று கல்லில் வடிக்கப் பெற்ற முருகப்பெருமான் மற்றும் வாயிற் காவலர் சிற்பங்கள் ஆகியவை இவ்வாலயத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன.
தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு இவ்வளவு பேரழகு உடைய வேறு ஒரு ஆலயம் இல்லை என்பதுதான் உண்மை. இவ்வாலயத்தின் கொடுங்கையின் மேற்புறம் கபோதகம் எனும் சிற்ப அமைப்புகள் உள்ளன. அந்த கபோதகங்களில் சுமார் ஒன்றரை அடி உயரமுடைய ஐம்பத்திரண்டு முருகனின் வெவ்வேறுபட்ட திருவடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு கரங்களிலிருந்து முப்பத்திரண்டு கரங்கள் வரை உள்ள முருகப்பெருமானின் வடிவங்களும், புலி, சிங்கம், அசுரன், காட்டுப்பன்றி போன்ற வேறு எங்கும் காண முடியாத வாகனங்களுடன் முருகன் திகழ்வதை இங்கு காணலாம்.
தஞ்சை நாயக்கர் எடுத்த இந்தக் கந்த கோட்டத்தின் ஸ்ரீவிமானத்தின் பின்புறச் சுவரில் மீண்டும் நாம் வள்ளித் திருமண காட்சிகளைக் காண முடிகின்றது. தினைப் புனம் காக்கும் வள்ளி, வேடுவனாக முருகன் வருவது, கணபதிப் பிள்ளையார் யானை உருவில் வந்து வள்ளியை பயமூட்டுவது, வள்ளி கிழவராகத் திகழும் முருகனைக் கட்டிப்பிடிப்பது எனப் பல சிற்பங்கள் வள்ளித் திருமணத்தை நமக்குக் காட்டி நிற்கின்றன.
வள்ளி மணாளனாகிய கந்தனை மாமன்னன் ராஜராஜ சோழனும், நாயக்க மன்னன் செவ்வப்பனும் போற்றியுள்ள பாங்கினை நமக்கு எடுத்துக் காட்டுபவையே தஞ்சை கோயில் கோபுரமும், கல்வெட்டும், கந்த கோட்டமும் என்றால் மிகையன்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.