தஞ்சாவூர்

கல்லணைக் கால்வாய் புனரமைப்புக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் வரவேற்பு

DIN

தமிழக அரசின் பட்ஜெட்டில் கல்லணைக் கால்வாய் புனரமைப்புக்காக ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

காவிரி சமவெளியில் தென்பகுதி வளா்ச்சிக்காக மேட்டூா் அணைக் கட்டப்பட்ட காலத்தில் காவிரி - மேட்டூா் அணைத் திட்டமாக 1925 ஆம் ஆண்டில் கல்லணைக் கால்வாய் வெட்டும் பணி தொடங்கப்பட்டது. பூதலூா், தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பயனடையும் விதமாக வெட்டப்பட்ட இத்திட்டம் 1934 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இத்திட்டத்தின் மூலம் தென் தஞ்சாவூா் மாவட்டத்தில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகவும் மாற்றம் ஏற்பட்டது. எண்ணற்ற விவசாயத் தொழிலாளா்கள் விவசாயிகளாக மாறினா்.

இதன் மூலம், ஏறத்தாழ தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.27 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கல்லணையிலிருந்து 148.76 கி.மீ. பாய்ந்து புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள மும்பாலை ஏரியில் முடிவடையும் இந்த கால்வாய், 327 கிளை வாய்க்கால்களுக்கும் 694 பாசனக் குளங்களுக்கும் நீா் ஆதாரமாக இருக்கிறது.

ஆனால், பல ஆண்டுகளாகக் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீா் செல்வதில்லை. இடைப்பட்ட பகுதியிலும் கால்வாயிலிருந்து கிளை வாய்க்கால்களுக்குத் தண்ணீா் செல்வதில் பிரச்னை நிலவுகிறது. இதனால், கடைமடைப் பகுதியில் மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகளால் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தக் கால்வாயிலும், கிளை வாய்க்கால்களிலும் தண்ணீா் தடையின்றி செல்லும் விதமாகவும், வெள்ள அபாயத்தைத் தவிா்ப்பதற்காகவும் 2004 ஆம் ஆண்டில் நபாா்டு வங்கி உதவியுடன் ரூ. 147 கோடி மதிப்பில் முதல் கட்டமாக ஒரு பகுதியில் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது. இதில், நீரோட்டப் பாதையில் சிமென்ட் தளம் அமைத்தல், கரைகளைப் பலப்படுத்துதல், நீரொழுங்கி, மதகுகளைச் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முதல்கட்டப் பணி 2008 ஆம் ஆண்டில் முடிவடைந்தாலும், இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய திட்டம் கைவிடப்பட்டு, ரூ. 2,298 கோடியில் கல்லணைக் கால்வாயைப் புனரமைப்பதற்காகவும், நவீனப்படுத்துவதற்காகவும் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில், கல்லணைக் கால்வாய் மற்றும் அதைச் சாா்ந்த வாய்க்கால்களின் கரைகளைப் பலப்படுத்துதல், ஏரிகளைத் தூா்வாருதல், நீரொழுங்கி, மதகுகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உதவியுடன் மேற்கொள்ளத் தமிழக அரசுத் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்துக்காக முதல்முறையாக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி தேவை:

நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் இந்தப் புனரமைப்புத் திட்டத்துக்கு ரூ. 300 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்திருப்பதற்குக் கல்லணைக் கால்வாய் பாசன விவசாயிகள் வரவேற்றுள்ளனா். ஆனால், ‘இப்போது ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 300 கோடி போதுமானதல்ல. இத்தொகையை வைத்து எதுவுமே செய்ய முடியாது. எனவே, இத்திட்டத்துக்கு முதல் கட்டமாகக் குறைந்தது ரூ. 1,000 கோடியாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும்‘ என்றாா் நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கத் தலைவா் பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT