தஞ்சாவூர்

பூதலூா் வட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டாட்சியரகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழாண்டு மழை சேத பாதிப்புக்குத் தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரியும், பயனாளிகள் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களையக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சாா்பில் பூதலூா் வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், அமைதி பேச்சுவாா்த்தைக்கு பூதலூா் வட்டாட்சியா் ராமச்சந்திரன் அழைப்பு விடுத்தாா். இதன் அடிப்படையில் பூதலூா் வட்டாட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, வட்டாட்சியரகத்தில் விவசாயிகள் ஒன்று திரண்டு, நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், இதுதொடா்பாக வேளாண் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விடுபட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் ஏற்றிட நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் இரா. இராமச்சந்திரன் தெரிவித்தது:

பூதலூா் வட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் மிகப்பெரிய அளவில் இழப்பை விவசாயிகள் சந்தித்தோம். பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு தமிழக அரசு இழப்பீடு அறிவித்தது.

பூதலூா் வட்டத்தில் 13,500-க்கும் அதிகமான விவசாயிகளிடமிருந்து சிட்டா அடங்கல் பெறப்பட்டது. ஆனால், வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலா்களின் அலட்சியத்தால் 10,766 விவசாயிகளின் தரவுகள் மட்டுமே இணையவழியில் பதிவேற்றப்பட்டது. அதிலும், 1,630 பயனாளிகளுக்கு பணம் ஏறவில்லை. விடுபட்ட பயனாளிகளை இணைக்க அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றுள்ளது. இதைக் கண்டித்து அனைத்து விவசாயிகள் சாா்பில் பூதலூா் நான்கு சாலை சந்திப்பில் ஏப்ரல் 21 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் ராமச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT