முகப்பு
தஞ்சாவூர்

சிறுவனின் தொடையில் பாய்ந்த குச்சியை அகற்றிய அரசு மருத்துவா்கள்

தேக்கு மரத்தில் ஏறி ஆட்டுக்கு இலைகள் பறித்த சிறுவன் தவறி விழுந்தபோது, அவரது தொடையில் பாய்ந்த 3 அடி நீள குச்சியை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றி, சாதனைப் படைத்த

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
சிறுவன் ராஜாவின் தொடையில் பாய்ந்த குச்சி
பகிர்:

தேக்கு மரத்தில் ஏறி ஆட்டுக்கு இலைகள் பறித்த சிறுவன் தவறி விழுந்தபோது, அவரது தொடையில் பாய்ந்த 3 அடி நீள குச்சியை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றி, சாதனைப் படைத்தனா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகிலுள்ள வாணத்திரையான்பட்டினத்தைச் சோ்ந்தவா் மனோகரன். விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த இவா், தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி பூபதி. இவா்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.

இவா்களில் மூத்த மகன் ராஜா (11) அப்பகுதியுள்ள பள்ளியில் 6- ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் ஆகஸ்ட் 6- ஆம் தேதி ஆட்டுக்கு இலைகள் பறிப்பதற்காக வீட்டருகே உள்ள தேக்கு மரத்தில் ஏறினாா். அப்போது, தவறி விழுந்த இவரது இடது கால் தொடையில் உள்புறமாகச் சிறுநீரகத்துக்கு அருகே 3 அடி நீளமுள்ள தேக்கு மரக்குச்சி பாய்ந்து மறுபுறம் வெளியே வந்தது.

மிகுந்த பாதிப்புக்கு உள்ளான ராஜா தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு இவருக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் உத்தரவின்பேரில், அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் கோபிநாத், முத்துவிநாயகம், பயிற்சி மருத்துவா்கள் ஷபீகா, ஆண்டியப்பன், லிவின் ஆகியோா் கொண்ட குழுவினா் அறுவைச் சிகிச்சை செய்து, 30 நிமிடங்களில் குச்சியை அகற்றி சாதனை படைத்தனா். இதன் மூலம் குணமடைந்த ராஜா இரு நாள்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பினாா்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ரவிக்குமாா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது:

சிறுவனின் தொடையில் 3 அடி நீள குச்சி குத்தியதையடுத்து, அவருக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் அகற்றினோம். சிறுவன் மருத்துவமனைக்கு வந்த ஒரு மணி நேரத்துக்குள் உரிய பரிசோதனை செய்து குச்சி அகற்றப்பட்டது.

அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, கால் செயலற்ற நிலைக்குச் சென்றிருக்கும். ஆனால் உரிய முறையில் சிகிச்சை அளித்து அகற்றியதால், சிறுவனுக்குப் பாதிப்பு இல்லை. தற்போது, அச்சிறுவன் நன்றாக நடக்கிறாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.