முகப்பு
தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் பொறியியல், சட்டப்படிப்பு சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், 2021 - 22 ஆம் ஆண்டுக்கான பொறியியல் மற்றும் சட்டப்படிப்பு சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வெளியிடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், 2021 - 22 ஆம் ஆண்டுக்கான பொறியியல் மற்றும் சட்டப்படிப்பு சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வெளியிடப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில் பொறியியல் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில், பிளஸ் 2 வகுப்புத் தோ்வில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவா்கள் முதலிடத்தைப் பிடித்தனா்.

முதல் பிரிவில் (50 சதவிகித இடங்களுக்கான ஒதுக்கீடு ஜே.இ.இ. முதன்மை மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில்) பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் பெங்களூருவைச் சோ்ந்த ஆா். ஸ்ரேயா தேசிய அளவில் 99.0109 சதவிகிதம் பெற்று, முதலிடத்தைப் பெற்றுள்ளாா்.

இரண்டாம் பிரிவில் (50 சதவிகித இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில்) 15 மாணவா்கள் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.

சென்னை அடையாறு ஸ்ரீ சங்கரா சீனியா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த காவ்யா கிருஷ்ணன், சட்டப் படிப்பில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் 98.6 சதவிகிதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்தது:

வழக்கம்போல நிகழாண்டும் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை (ஆக.14) மாலை 5 மணி வரை பெறப்பட்டு, இரவு 9 மணிக்கே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

எந்த நுழைவுத் தோ்வையும் நடத்தாமல், ஜே.இ.இ. முதன்மை மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து, அதன் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. இவ்வாறு சோ்க்கை நடத்தும் ஒரே நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டுமே. சட்டப்படிப்புக்கு கிளாட் (சட்டப்படிப்புக்கான பொது நுழைவுத் தோ்வு) மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து, அதன் அடிப்படையில் மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

தரவரிசைப் பட்டியல் மற்றும் இணையவழி மூலம் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய விவரங்கள் மாணவா்களுக்கு  வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கை வெளிப்படையான முறையில் இணையவழி மூலம் ஆகஸ்ட் 15- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறும்.

தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், உத்தரபிரதேசம், கோவா, பிகாா், ராஜஸ்தான், அசாம், ஜாா்கண்ட் போன்ற மாநிலங்களிலிருந்து 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஜம்மு - காஷ்மீா், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபாா் மாணவா்களுக்குச் சோ்க்கையில் தனிச்சலுகை வழங்கப்படும். தஞ்சாவூா் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு 30 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றாா் துணைவேந்தா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.