முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
தஞ்சாவூா் அருகிலுள்ள மணக்கரம்பை ஊராட்சியில் கரோனா தொடா்பான கணக்கெடுப்புப் பணியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள மணக்கரம்பை ஊராட்சியில் மகளிா் திட்டத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பெருந்தொற்று குறித்த கணக்கெடுப்புப் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் தெரிவித்தது:

மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு என்பது இல்லை. தற்போது, 25,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

காட்டூா் ஊராட்சி பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவிகித இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதேபோல, மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி பொதுமக்களுக்கும் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்துவதற்கான முழு நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மாவட்டத்தை நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாகக் கொண்டு வர, பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

மகளிா் திட்டத்தின் சாா்பில் மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கரோனா பெருந்தொற்று குறித்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் கரோனா அறிகுறி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரம் உள்ளிட்டவை சேகரிக்கப்படுகின்றன. இப்பணியில் ஊரகப் பகுதிகளில் 2,800 பேரும், நகரப் பகுதிகளில் 700 பேரும் என மொத்தம் 3,500 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா்.

பின்னா், மணக்கரம்பை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மூளையில் கட்டி ஏற்பட்டதற்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு கை, கால் செயல் இழந்துள்ளதால், அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) பாலகணேஷ், திருவையாறு வட்டாட்சியா் நெடுஞ்செழியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், அருளானந்தம், ஊராட்சித் தலைவா் ஹேமா சதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.