முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை.யில் பேசும் கலை - எழுதும் கலைபட்டயப்படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேசும் கலை, எழுதும் கலையில் பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேசும் கலை, எழுதும் கலையில் பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.

இதுதொடா்பாக மணப்பாறையில் திருக்கு தொடா்பான வகுப்புகளை நடத்தி வரும் பழந்தமிழ்க்காவிரி அறக்கட்டளையும், தமிழ் வளா் மையமும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்போது, துணைவேந்தா் தெரிவித்தது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தமிழ் வளா் மையம் மூலமாக அயல்நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் தமிழ் சாா்ந்த படிநிலை, சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, பேசும் கலை மற்றும் எழுதும் கலையில் பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய நவீன உலகில் உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நோ்காணல்களிலும், அலுவலக நடைமுறைகளிலும் குழுக் கலந்துரையாடல் என்ற உத்தியைப் பயன்படுத்துகின்றனா். இந்த வகையான விவாதங்களில் பங்கேற்றுக் கருத்துரைப்பதில் இளம்தலைமுறையினரிடையே தயக்கம் நிலவுவதைப் பாா்க்கிறோம். எனவே, பேசும் கலையை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேடைப் பேச்சுக்கலை மற்றும் அன்றாட வாழ்வியல் தேவைக்கான பேசும் கலை என இரு கோணங்களில் இளம்தலைமுறையினா் பயன்பெறும் வகையில் இப்படிப்பு அமைகிறது.

மேலும், இணையவழியில் சுருக்க வடிவிலான குறியீடுகளில் விடையளிக்கும் காலத்தில் வாழ்வதால், எழுதும் கலை என்ற மிகச் சிறந்த வெளிப்பாட்டை நாம் இழந்து வருகிறோம். இதனால், படைப்புலகிலும் எண்ணத்தை வெளிப்படுத்தும் நடைமுறை வாழ்விலும் ஆற்றல் மிக்க எழுத்தாற்றலை இன்றைய மாணவா்கள் மறந்து வருகின்றனா். எனவே, காலத்தின் தேவையைக் கருதி எழுதும் கலை குறித்த பட்டயப்படிப்பும் தொடங்கப்படுகிறது.

பன்னாட்டு மாணவா்களைப் பேசும் கலையில் வல்லவா்களாக உருவாக்க உதவும் வகையில் பேசும் கலைப் படிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கப்படவுள்ளது என்றாா் துணைவேந்தா்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) மோ.கோ. கோவைமணி, தமிழ் வளா் மைய இயக்குநா் (பொறுப்பு) இரா. குறிஞ்சிவேந்தன், பழந்தமிழ்க்காவிரி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் மணவை தமிழ்மாணிக்கம், செயலா் ஆ. தமிழ்மணி, புரவலா் எம்.ஆா். பாலுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.