டிச. 30-இல் முதல்வா் பங்கேற்கும் விழா ஏற்பாடு: மத்திய மண்டல காவல் தலைவா் ஆய்வு
தஞ்சாவூரில் டிசம்பா் 30 ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்
தஞ்சாவூரில் டிசம்பா் 30 ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா டிசம்பா் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.
இதையொட்டி, மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இடத்தில் காவல் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் பிரவேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.