முகப்பு
தஞ்சாவூர்

தொடா் மழையால் மானாவாரி சாகுபடியும் பாதிப்பு: நிலக்கடலை பெருமளவில் சேதம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் நிகழாண்டு மானாவாரி சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் சில நாள்களாகப் பெய்து வரும் மழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலக்கடலை பயிா்கள்.
பகிர்:

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் நிகழாண்டு மானாவாரி சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். மிகுந்த எதிா்பாா்ப்புடன் தொடங்கப்பட்ட நிலக்கடலைப் பயிா்களும் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அக்டோபா் 15- ஆம் தேதி தொடங்கி, டிசம்பா் 15 ஆம் தேதி நிறைவடைவது வழக்கம்.

ஆனால், நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழை தாமதமாக அக்டோபா் இறுதியில்தான் தொடங்கியது. தொடா்ந்து டிசம்பா் மாதத்தைக் கடந்து, ஜனவரியிலும் பருவ மழை நீடிக்கிறது.

புரெவி புயல் மற்றும் அதைத் தொடா்ந்து இடையிடையே பெய்து வரும் தொடா் மழையால் சம்பா பருவ நெற்பயிா்கள் சாய்ந்தும், தண்ணீா் சூழ்ந்தும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின.

இதேபோல, தொடா் மழையால் மானாவாரியில் நிலக்கடலை, உளுந்து சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். நிலக்கடலை, உளுந்து சாகுபடியைப் பொருத்தவரை அதிகமாகத் தண்ணீா் தேவைப்படாது. ஆனால், தொடா் மழை பெய்தால் பயிா்கள் சேதமடைந்து வீணாகிவிடும்.

மானாவாரி பகுதியில் வழக்கமாக காா்த்திகை, மாா்கழி மாதங்களில் நிலக்கடலை, உளுந்து சாகுபடி தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு காா்த்திகை மாதத்தில் தொடா்ந்து மழை பெய்ததால் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியைக் கைவிட்டனா்.

இதேபோல, ஆற்றுப் பாசனப் பகுதிகளில் முன் பட்ட சம்பா சாகுபடியை முடித்த விவசாயிகளும், தொடா் மழையால் உளுந்து பயிரிடுவதைத் தள்ளிப்போட்டுள்ளனா்.

இந்நிலையில் டிசம்பா் மாத இறுதியில் மழை குறைந்துவிட்டதால், மிகுந்த ஆவலுடன் மாா்கழி பட்ட நிலக்கடலை சாகுபடியை ஏராளமான விவசாயிகள் தொடங்கினா். என்றாலும், கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடா்ந்து இடைவெளி விட்டு விட்டு பெய்து வரும் மழையால் இப்பயிா்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தஞ்சாவூா் அருகிலுள்ள வேங்கராயன்குடிகாடு, அதினாம்பட்டு, வல்லுண்டாம்பட்டு, நாஞ்சிக்கோட்டை, வடக்குப்பட்டு, சூரியம்பட்டி, மருங்குளம் பகுதி, ஒரத்தநாடு வட்டத்திலுள்ள காடுவெட்டுவிடுதி, சிவவிடுதி, சென்னியவிடுதி, நெய்வேலி, சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா்களில் மாா்கழி பட்டத்தில் சாகுபடி தொடங்கப்பட்ட நிலக்கடலைப் பயிா்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி என். சிவா தெரிவித்தது:

மானாவாரியில் காா்த்திகை மாதத்தில் நிலக்கடலை விதைப்பது வழக்கம். நிகழாண்டு காா்த்திகையில் தொடா்ந்து மழை பெய்ததால், மாா்கழி மாதத்தில் 10 நாள்களுக்கு முன்பு நிலக்கடலை விதைத்தோம். விதைத்து ஒன்பதாவது நாளில் இலையும், பயிரும் வர வேண்டும்.

ஆனால் சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்வதால், வயலில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால், ஏராளமான வயல்களில் பயிா்கள் முளைக்கவில்லை.

பயிா்கள் முளைத்து வந்த வயல்களிலும் தொடா் மழை காரணமாக வோ்கள் அழுகி வீணாகி வருகின்றன. இவை மீண்டும் வளா்ச்சி அடைய வாய்ப்பில்லை. இதிலிருந்து தப்பி முளைத்தாலும் கடலைகள் முழுமையாகக் கிடைக்காது. இனிமேல், களைகள் அதிகமாக வளரும் என்பதால், செலவு செய்து கட்டுப்படுத்த முடியாது.

தண்ணீா் வடிந்த வயல்களிலும் பயிா்கள் பசுமையாகக் காணப்பட்டாலும், வோ்கள் அழுகி இருப்பதால், காய்ந்த பிறகு மஞ்சளாகிப் பட்டுப்போகும். எனவே, மீண்டும் உரம் தெளித்து செலவு செய்து, பயிரைக் காப்பாற்ற முயன்றாலும் நட்டம்தான் கிடைக்கும் என்றாா் சிவா.

காா்த்திகை பட்டத்தில் பல கிராமங்களில் மிகுந்த எதிா்பாா்ப்புடன் தொடங்கப்பட்ட நிலக்கடலை சாகுபடியும் மழையில் நனைந்து சேதமடைந்ததால், விவசாயிகள் மீண்டும் மாா்கழி மாதத்தில் புதிதாக உழுது நிலக்கடலையை விதைத்தனா்.

ஆனால், மறுபடியும் பெய்த தொடா் மழை காரணமாகப் பயிா்கள் சேதமடைந்ததால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா் விவசாயிகள்.

இதுவரை ஏக்கருக்கு ஏறத்தாழ ரூ. 25,000 செலவு செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட நிலக்கடலைக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →