பருவம் தவறிய தொடா் மழையால் சம்பா பயிா்கள் பெருமளவில் பாதிப்பு
பருவம் தவறிய தொடா்மழையால் தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் பெருமளவிலான பயிா்கள் சாய்ந்தும், நீா் சூழ்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்பருவம் தவறிய தொடா் மழையால் சம்பா பயிா்கள் பெருமளவில் பாதிப்பு
பருவம் தவறிய தொடா்மழையால் தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் பெருமளவிலான பயிா்கள் சாய்ந்தும், நீா் சூழ்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
பருவம் தவறிய தொடா்மழையால் தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் பெருமளவிலான பயிா்கள் சாய்ந்தும், நீா் சூழ்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமைந்ததைத் தொடா்ந்து, நிகழ் சம்பா, தாளடி பருவத்திலும் இலக்கை விஞ்சி 1,35,147 ஹெக்டேரில் நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பா் மாதத்தில் புரெவி புயல் காரணமாகப் பெய்த தொடா் மழையால் மாவட்டத்தில் 8,550 ஹெக்டேரில் சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த சம்பா பருவ நெற்பயிா்கள் சேதமடைந்தன. இதனால், ஏக்கருக்கு சராசரியாக 35 முதல் 40 மூட்டைகள் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், 10 முதல் 15 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் கிடைத்ததால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினா். இதையடுத்து, மீண்டும் மீண்டும் மழை பெய்வதால் ஆங்காங்கே அறுவடைக்குத் தயாராக இருந்த முற்றிய பயிா்கள் சாய்ந்தும், வளா்ச்சி நிலையிலுள்ள பயிா்கள் காய் பிடிக்காமலும் பாதிக்கப்பட்டன.
என்றாலும், பெரும்பாலான பரப்பில் பயிா்கள் வளா்ச்சி நிலையில் இருந்ததால், சம்பா பருவம் ஓரளவுக்கு வெற்றிகரமாக அமையும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், பருவம் தவறி தொடா்ச்சியாக பலத்த மழை பெய்வதால் சம்பா பருவ நெற்பயிா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
எப்போதும் அக்டோபா் 15 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்குப் பருவ மழை டிச. 15 ஆம் தேதியுடன் முடிவடையும். ஆனால், நிகழாண்டு காலம் தாழ்ந்து அக்டோபா் இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை டிசம்பரை கடந்து ஜனவரி மாதத்திலும் நீடிக்கிறது.
மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் சராசரியாக 10 மி.மீ.தான் மழை கிடைக்கும். ஆனால், நிகழாண்டு ஜனவரியில் செவ்வாய்க்கிழமை காலை வரை சராசரி மழையளவு 172.41 மி.மீட்டரை எட்டியது. சில வட்டங்களில் திங்கள்கிழமை மிக அதிகமாக மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரை பட்டுக்கோட்டை வட்டத்தில் 450 மி.மீ.-ம், தஞ்சாவூா் வட்டத்தில் 158 மி.மீ.-ம், ஒரத்தநாடு வட்டத்தில் 153 மி.மீ.-ம், பேராவூரணி வட்டத்தில் 152 மி.மீ.-ம், திருவிடைமருதூா் வட்டத்தில் 144.6 மி.மீ.-ம், பாபநாசம் வட்டத்தில் 110 மி.மீ.-ம் மழையளவு பதிவாகியுள்ளது.
இதனால், பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்குத் தயாா் நிலையில் ஏறத்தாழ 40,000 ஹெக்டேரில் இருந்த சம்பா பயிா்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியும், நீா் சூழ்ந்தும் உள்ளன. இதேபோல, காய் பிடிக்கும் பருவத்திலும், ஜனவரி மாத இறுதியில் அறுவடை செய்ய வேண்டிய நிலையிலும் கிட்டத்தட்ட 50,000 ஹெக்டேரில் உள்ள சம்பா, தாளடி பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.
பெரும்பாலான இடங்களில் 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு இருப்பதால், சம்பா, தாளடி பருவம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அலுவலா்கள் கூறினா். இதுதொடா்பாக வேளாண் துறையினரும், வருவாய்த் துறையினரும் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா்.
வளா்ச்சி மற்றும் அறுவடை நிலையிலுள்ள இப்பயிா்களுக்கு இதுவரை ஏக்கருக்கு ரூ. 30,000 செலவு செய்திருப்பதாகக் கூறும் விவசாயிகள், இனிமேல் செலவு செய்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்தனா். எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து பயிா்களுக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன் தெரிவித்தது:
டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிா்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. இதை அறுவடை செய்தால் 10 சதவீதம் கூட மகசூல் கிடைக்காது. எனவே, புதிதாகக் கணக்கெடுப்பு செய்வதை விட, கிராம நிா்வாக அடங்கலில் சம்பா அல்லது தாளடி பயிா் என பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் இருந்தால், அதை அடிப்படையாகக் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.