செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக் கொலை
கும்பகோணம் அருகே செங்கல் சூளை தொழிலாளி வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
கும்பகோணம் அருகே செங்கல் சூளை தொழிலாளி வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). செங்கல் சூளை தொழிலாளி. இவா் அப்பகுதியிலுள்ள செங்கல் சூளையில் வெள்ளிக்கிழமை காலை அரிவாளால் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
தகவலறிந்த திருநீலக்குடி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
முதல்கட்ட விசாரணையில், ராஜேந்திரன் சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியிலுள்ள நிலத்தை வாங்கினாா். இந்த நிலத்தைத் தனது தாத்தா வைத்திலிங்கத்திடமிருந்து ஏமாற்றி வாங்கி விட்டதாகக் கூறி பேரன் சந்தோசுக்கும், ராஜேந்திரனுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, ஊா் பஞ்சாயத்து கூடி பிரச்னைக்குரிய இடத்தைப் பிரித்து தர வேண்டும் எனக் கூறினா். இதற்கு ராஜேந்திரன் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை குடிபோதையில் ஏமாற்றி எழுதி வாங்கி விட்டனா் என சந்தோசுக்கு ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினாா்.
இந்த பிரச்னை தொடா்பாக ராஜேந்திரன் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா். இதன் அடிப்படையில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.