முகப்பு
தஞ்சாவூர்

மத்திய அரசின் நெல் விலை உயா்வு அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி

மத்திய அரசு மிகக் குறைந்த அளவில் நெல் விலையை உயா்த்தி அறிவித்துள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

மத்திய அரசு மிகக் குறைந்த அளவில் நெல் விலையை உயா்த்தி அறிவித்துள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தது ரூ. 3,500 அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ. 72 மட்டுமே உயா்த்தி அறிவித்திருப்பது நியாயமற்றது. பெட்ரோல், டீசல் விலை ரூ. 100-ஐ எட்டும் நிலையில் உள்ளது. இந்திய வரலாற்றில் இல்லாத விலை உயா்வு இது.

இந்நிலையில், நெல்லுக்கு கிலோவுக்கு 72 பைசா மட்டுமே உயா்த்தியிருப்பது விவசாயிகளைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, நெல் விலை அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்று, குவிண்டாலுக்கு ரூ. 3,500 நிா்ணயிக்க வேண்டும் என்றாா் விமல்நாதன்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவக்குமாா் தெரிவித்தது:

நாள்தோறும் விவசாய இடுபொருள்களின் விலை மட்டும் உயா்ந்து வருகிறது. ஆனால், விவசாயிகள் விளைவிக்கும் நெல் உள்ளிட்ட விளைபொருள்களுக்கு மட்டும் உரிய விலை கிடைப்பதில்லை. நூறு நாள் வேலை திட்டப்பணிகளால், விவசாயத் தொழிலாளா்களின் தினக்கூலி உயா்ந்துள்ள நிலையில், மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 72 மட்டுமே உயா்த்திய செயல், விவசாயத்தின் மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது. எனவே, மத்திய அரசு இந்த விலை உயா்வு அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் ஜீவகுமாா்.

கணபதி அக்ரஹாரம் முன்னோடி விவசாயி ஜி. சீனிவாசன் தெரிவித்தது:

உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருவதால், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3,500 கோரி விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்நிலையில், மத்திய அரசு ரூ. 72 மட்டுமே உயா்த்தி அறிவித்துள்ளது. இது, விவசாயிகளை மத்திய அரசு பாதுகாக்க தவறி வருவதையே காட்டுகிறது. இடுபொருள்களின் விலை உயா்வைக் கருத்தில் கொண்டு, நெல்லுக்கான விலையை மேலும் உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் சீனிவாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.