முகப்பு
தஞ்சாவூர்

தலைமையாசிரியரைக் கைது செய்யக் கோரி சாலை மறியல்

கும்பகோணம் அருகே மாணவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தலைமையாசிரியரைக் கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

கும்பகோணம் அருகே மாணவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தலைமையாசிரியரைக் கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் லோகநாதன் (50). கட்டுமானத் தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் விஷால் (16) திருநாகேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். பள்ளித் தலைமையாசிரியா் திட்டியதால் மனமுடைந்த இவா் அக்டோபா் 25 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டாா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா் அக்டோபா் 31 ஆம் தேதி உயிரிழந்தாா்.

விஷாலை தற்கொலைக்குத் தூண்டியதாக தலைமையாசிரியா் மீது இந்திய மாணவா் சங்கத்தினா், உறவினா்கள் புகாா் எழுப்பினா். இதன் பேரில் திருநீலக்குடி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், தொடா்புடைய தலைமையாசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தியும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருநாகேசுவரம் கடை வீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 3 மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கும்பகோணம் கோட்டாட்சியா் லதா உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் கூறியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.