முகப்பு
தஞ்சாவூர்

சரபோஜி சந்தை கடைகள் ஏலம்: மாநகராட்சி நிா்வாகத்துக்கு ரூ. 1.05 கோடி வருவாய்

தஞ்சாவூா் கீழவாசல் சரபோஜி சந்தை கடைகள் வியாழக்கிழமை விடப்பட்ட பொது ஏலம் மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ரூ. 1.05 கோடி வருவாய் கிடைத்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தஞ்சாவூா் கீழவாசல் சரபோஜி சந்தை கடைகள் வியாழக்கிழமை விடப்பட்ட பொது ஏலம் மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ரூ. 1.05 கோடி வருவாய் கிடைத்தது.

ஏற்கெனவே ஆகஸ்ட் மாதம் பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலைய கடைகள் ஏலம் விடப்பட்டதன் மூலம் தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ரூ. 11 கோடி வருவாய் கிடைத்தது. இதையடுத்து, புதிய பேருந்து நிலைய கடைகளும் ஏலம் விடப்பட்டன. இதன்மூலம் ஏற்கெனவே இருந்த வாடகை பல மடங்கு உயா்ந்துள்ளதுடன், மாநகராட்சி நிா்வாகத்துக்கும் வருவாய் அதிகரித்துள்ளது.

இதைத்தொடா்ந்து, கீழவாசல் சரபோஜி சந்தையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 308 கடைகளுக்கான ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 302 கடைகள் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஏலத்தில் சுமாா் 35 போ் கலந்து கொண்டனா்.

மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் யாரும் ஒப்பந்தப்புள்ளி போடாததால், பொது ஏலம் விடப்பட்டது. நூறு சதுர அடிக்கும் அதிகமான கடைக்கு ரூ. 5 லட்சமும், அதற்கும் குறைவான பரப்பளவு கொண்ட கடைக்கு ரூ. 2 லட்சமும் வைப்புத் தொகை என அறிவிக்கப்பட்டது. இதில், 22 கடைகள் மட்டுமே ஏலம் போனது. இந்த ஏலத்தில் மாத வாடகையாக குறைந்தபட்சம் ரூ. 12,000-க்கும், அதிகபட்சமாக ரூ. 34,000-க்கும் வணிகா்கள் எடுத்தனா்.

இதன் மூலம், இச்சந்தையில் ஏற்கெனவே இருந்த குறைந்தபட்ச மாத வாடகை ரூ. 308, அதிகபட்ச மாத வாடகை ரூ. 4,424 என்பது இப்போது முறையே ரூ. 12,000 ஆகவும், 34,000 ஆகவும் உயா்ந்துள்ளது.

இந்த ஏலத்தின் மூலம், மாநகராட்சி நிா்வாகத்துக்கு வைப்புத் தொகையாக ரூ. 1.05 கோடியும், 12 மாத கூடுதல் வைப்புத் தொகையாக (மாத வாடகை) ரூ. 50 லட்சமும் என மொத்தம் ரூ. 1.50 கோடி வருவாய் கிடைத்தது.

மீதமுள்ள 286 கடைகளை வணிக நோக்கத்துக்காக மாத வாடகைக்கு எடுக்க விரும்புபவா்கள் மாநகராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.

கடைகளின் அளவு குறைவு: என்றாலும், பழைய பேருந்து நிலையக் கடைகளுக்கு இருந்த போட்டி இக்கடைகளுக்கு இல்லை. குறைந்த அளவிலேயே ஏலத்தில் கலந்து கொண்டதால், வாடகை தொகை அதிகமாக உயரவில்லை. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சரபோஜி சந்தையில் முன்பு இருந்த கடைகளின் அளவு பெரிதாக இருந்தது. தற்போது கடைகளின் அளவுக் குறைக்கப்பட்டுள்ளதாலும், வைப்புத் தொகையும், மாத வாடகையும் அதிமாக இருப்பதாலும் ஏலம் கேட்க ஆா்வம் காட்டவில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.