முறைகேடு செய்யும் அலுவலா்களை இடமாற்றக் கோரிகுருங்குளம் சா்க்கரை ஆலை முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை முன் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊழல் முறைகேடு செய்யும் அலுவலா்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை முன் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
2021 - 22 அரைவை பருவத்தை நவம்பா் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். 2021 - 22 அரைவை பருவத்துக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு வெட்டுக் கூலியை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆலையில் உபரியாக இருக்கும் இடத்தில் சூரியஒளி மின் உற்பத்தி தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,000 விலை நிா்ணயிக்க வேண்டும். சா்க்கரை ஆலையில் அரசு ஊதியம் பெறும் அலுவலா்கள், பொறியாளா்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், குருங்குளம் சா்க்கரை ஆலையில் இடமாற்றம் செய்யப்பட்ட ஊழல் முறைகேட்டில் சிக்கிய பொறியாளரை மீண்டும் இந்த ஆலைக்கே பணி மாற்றம் செய்திருப்பதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத் தலைவா் ப. ராமசாமி தலைமை வகித்தாா். இதில், பொதுச் செயலா் ரெ. திருப்பதி வாண்டையாா், செயலா் பி. கோவிந்தராஜ், பொருளாளா் பொ. அா்ச்சுனன், ந. அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.