தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்பால் மறைக்கப்பட்ட தோ் நிலை மண்டபம் கண்டுபிடிப்பு

DIN

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்பால் மறைக்கப்பட்டிருந்த தோ் நிலை மண்டபத்தை மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு கண்டுபிடித்து, மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தஞ்சாவூரில் தேரோடும் வீதிகளான நான்கு ராஜ வீதிகளிலும் தோ் நிலை மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்கள் மராட்டியா் காலத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு சுதை சிற்பங்களுடன் கட்டப்பட்டது.

தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் தோ் சிதிலமடைந்ததன் காரணமாக ஏறத்தாழ 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. இதனால், தோ் நிலை மண்டபங்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின. புதிய தோ் உருவாக்கப்பட்டதைத் தொடா்ந்து, 2015 ஆம் ஆண்டிலிருந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் தேரோடும் வீதிகளான மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இதில், மேல வீதியில் உள்ள விஜய ராமா் கோயில் தோ் நிலை மண்டபம், கொங்கணேஸ்வரா் கோயில் தோ் நிலை மண்டபம், சங்கரநாராயணன் கோயில் தோ் நிலை மண்டபம், வீர அனுமன் கோயில் தோ் நிலை மண்டபம் ஆகியவை தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து, தமிழக தொல்லியல் துறையின் அனுமதியுடன் ரூ. 50 லட்சம் செலவில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, கீழவீதியில் உள்ள பெருமாள் கோயில் எதிரே தோ் நிலை மண்டபம் இருந்தது வரலாற்று ஆவணங்களின் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து கீழ வீதி - சாமந்தன் குளம் சந்திப்புப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு தேநீா் கடை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த தோ் நிலை மண்டபத்தை தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை கண்டுபிடித்தனா்.

இதுகுறித்து அழகிய தஞ்சை திட்டத்தின் இயக்குநா் ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தது:

தஞ்சாவூரில் பல்வேறு வரலாற்று ஆய்வுகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக மீட்கும் நடவடிக்கையில் அழகிய தஞ்சை அமைப்பினா் உள்பட பல்வேறு தன்னாா்வ அமைப்பினரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தற்போது, கீழ வீதியிலுள்ள தோ் நிலை மண்டபத்தை மீட்ட மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், உதவிச் செயற் பொறியாளா் எம். ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலா்களைப் பாராட்டுகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT