முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்துக்கு சரக்கு ரயிலில் 2,641 டன் யூரியா வந்தது

கும்பகோணத்துக்கு சரக்கு ரயில் மூலம் 2,641 டன் யூரியா உரம் புதன்கிழமை வந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கும்பகோணத்துக்கு சரக்கு ரயில் மூலம் 2,641 டன் யூரியா உரம் புதன்கிழமை வந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் 13,000 ஹெக்டேரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதர பயிா்கள் 9,500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் 1,224 டன்கள் யூரியா பெறப்பட்டு, அனைத்து தனியாா் விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தற்போது ஆந்திர மாநிலம், கங்காவரம் துறைமுகத்திலிருந்து கும்பகோணத்துக்கு சரக்கு ரயில் மூலம் 2,641 டன்கள் யூரியா உரம் புதன்கிழமை வந்தது.

இதையடுத்து, இந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும், தனியாா் உரக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்தது:

அனைத்து விவசாயிகளும் அடுத்தடுத்த பருவத்துக்குத் தேவையான உரங்களை ஒரே நேரத்தில் இருப்பு வைக்காமல், நிகழ்பருவத்தின் பயிா் சாகுபடிக்குத் தேவையான உரங்களை மட்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தல், யூரியா விற்பனை செய்யும்போது இணை இடுபொருள்கள் வாங்கக் கட்டாயப்படுத்துதல் போன்ற செயல்களைக் கட்டுப்படுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியரின் உத்தரவின்படி வட்டார வாரியாகச் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக் கடைகளிலும் சிறப்புக் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். மேலும் உரம் தொடா்பான பிரச்னைகளை 04362- 267679 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.