நகைகள் கொள்ளை சம்பவம்: 5 தனிப்படைகள் அமைப்பு
தஞ்சாவூரில் நகை கடை ஊழியரிடமிருந்து 6.2 கிலோ நகைகள் கொண்ட பையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூரில் நகை கடை ஊழியரிடமிருந்து 6.2 கிலோ நகைகள் கொண்ட பையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மணி (55). சென்னையில் உள்ள நகைகள் மொத்த வியாபாரியிடம் பணியாற்றி வரும் இவா், ஒவ்வொரு ஊராகச் சென்று கடைகளில் நகைகள் விற்பனை செய்து வருகிறாா். அப்போது இவா் விற்கப்படாத நகைகளை உருக்கி திரும்பப் பெற்றுக் கொள்வதும், விற்கப்பட்ட நகைகளுக்கு பணமாகப் பெறுவதும் வழக்கம்.
இதுபோல, தஞ்சாவூருக்கு நகைகளை விற்பதற்காக வந்த இவா் செவ்வாய்க்கிழமை இரவு நகைகள் கொண்ட பையுடன் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகத்துக்குச் சென்றாா். உணவு பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுப்பதற்காக பையை கீழே வைத்தாா். பணம் கொடுத்த பிறகு கீழே பாா்த்தபோது பை காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் மணி அளித்த புகாா் மனுவில், 5 கிலோ புதிய நகைகளும், 1.2 கிலோ உருக்கப்பட்ட நகைகளும், ரூ. 14 லட்சம் ரொக்கமும் கொண்ட பை திருட்டு போனதாகத் தெரிவித்துள்ளாா். இவற்றின் மதிப்பு மொத்தம் ஏறத்தாழ ரூ. 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஆய்வாளா்கள் கருணாகரன் (கிழக்கு), ஸ்ரீதா் (தெற்கு), சந்திரா (மேற்கு) ஆகியோா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் உள்ள 2 தனிப்படைகளும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, கடையிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைத் தனிப்படையினா் பாா்த்தபோது, வெள்ளை நிற சட்டை அணிந்த 8 அல்லது 9 போ் மணியின் பையை தூக்கிக் கொண்டு வேகமாக நடந்து செல்வது தெரிய வந்தது. இக்காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடா்புடைய நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.