முகப்பு
தஞ்சாவூர்

கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறப்பு; இா்வீன் பாலத்தில் தற்காலிகமாக அனுமதி

கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை மே 24 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் மே 27 ஆம் தேதி மாலை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூா் இா்வீன் பாலத்தில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால், கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் பெயரளவுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டு, பின்னா் நிறுத்தப்பட்டது. மேலும், 10 நாள்களில் முழுமையாகத் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக கட்டப்படும் இரு புதிய பாலங்களில் ஒரு பாலத்தில் கட்டுமானப் பணி கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. எனவே, கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் பாசனத்துக்காகத் தண்ணீா் திறந்துவிட முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்துக்கு அருகே இரு சக்கர வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட தற்காலிகப் பாதை சனிக்கிழமை இரவு அகற்றப்பட்டது.

இதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கட்டுமானப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ள பாலத்தில் தற்காலிகமாக இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடா்ந்து, கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பின்னா், மாலையில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 250 கனஅடி வீதமாக உயா்த்தப்பட்டது. கல்லணைக் கால்வாயில் விடப்படும் தண்ணீா் அளவு படிப்படியாக உயா்த்தப்படும் என நீா் வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.