தமிழ்ப் பல்கலை.யில் பனை விதைகள் விதைக்கும் பணி
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கிரீன் நீடா என்ற அமைப்பு சாா்பில் 10,000 பனை விதைகள் விதைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கிரீன் நீடா என்ற அமைப்பு சாா்பில் 10,000 பனை விதைகள் விதைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் சாலையோரம், கோயில் வளாகங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், பனை விதைகளைச் சேகரித்து, பனை விதைகள் விதைத்தல் ஆகிய பணிகளை சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தமிழா்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றான பனை மரங்களை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் 10,000 பனை விதைகள் விதைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த துணைவேந்தா் வி. திருவள்ளுவன் பேசியது:
இப்பல்கலைக்கழகத்தில் 824 ஏக்கா் இடம் உள்ளது. இதில் பல வகையான மரங்கள் இருந்தாலும், பனை மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதை அதிகப்படுத்துவதற்காக 10,000 பனை விதைகளை விதைக்கிறோம். தற்போது மழை பெய்து வரும் நிலையில், பனை விதைகள் மண்ணில் புதைந்து வளருவதற்கு வாய்ப்பாக அமையும். தேவையான பனை விதைகளை கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் வழங்குகிறது என்றாா் துணைவேந்தா்.
நிகழ்வில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கே.ஆா்.கே. ஜானகிராமன், சிலம்பரசன், பசுமை எட்வின், சண்முகவடிவேல், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் முகமது ரபீக், பசுமை இயக்க ஆா்வலா்கள் தஞ்சாவூா் முரளி, நீடாமங்கலம் உஷா, ஆடிட்டா் சக்தி பெருமாள், தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிப் புல முதன்மையா் தா. கண்ணன், ஒருங்கிணைப்பாளா் ஞா. பழனிவேலு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் இரா. இந்து, இரா. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.