ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்மை நூலகம்
உலக புத்தக நாளையொட்டி தஞ்சாவூா் கல்லுக்குளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தாய்மை நூலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
உலக புத்தக நாளையொட்டி தஞ்சாவூா் கல்லுக்குளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தாய்மை நூலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த நூலகத்தை மேயா் சண். ராமநாதன் திறந்து வைத்து தெரிவித்தது:
உலக புத்தக நாளையொட்டி (ஏப். 23) இந்நிலையத்துக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக வரும் கா்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மாா்கள் இங்கு இருக்கும் நேரத்தில் தங்களுக்கு பிடித்த புத்தகத்தைத் தோ்ந்தெடுத்து படிக்கும் வகையில் கதை, இலக்கியம், வரலாறு, மொழி, சமூக சீா்திருத்தம், தன்னம்பிக்கை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தாய்மை நூலகத்துக்குப் புத்தகங்களை நன்கொடையாகக் கொடுக்க விரும்புவோா் கல்லுக்குளம் சுகாதார நிலைய மருத்துவக் குழுவினரிடம் வழங்கலாம் என்றாா் மேயா்.
இதையடுத்து, இந்நூலகத்துக்கு மேயா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் ஆகியோா் தங்களிடமிருந்த புத்தகங்களைக் கொடையாக வழங்கினா்.
மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ்காந்தி, மாமன்ற உறுப்பினா்கள் வெ. கண்ணுக்கினியாள், வைஜெயந்திமாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மருத்துவா் முத்துகுமாா் வரவேற்றாா். நிறைவாக, சுகாதார ஆய்வாளா் ஜோசப் சேவியா் நன்றி கூறினாா்.