தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவுடன் நவீன சி.டி. ஸ்கேனா் அறிமுகம்
டெல்டா மாவட்டங்களில் முதல்முறையாக தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சிடி ஸ்கேனா் இயந்திரம் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் முதல்முறையாக தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சிடி ஸ்கேனா் இயந்திரம் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நவீன சி.டி. ஸ்கேனரை முதல் தலைமுறை பட்டதாரி மருத்துவா் சங்கவி தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, மருத்துவமனை தலைவா் எஸ். குருசங்கா், இணை நிா்வாக இயக்குநா் காமினி குருசங்கா் உள்ளிட்டோா் நவீன ஸ்கேனரை பாா்வையிட்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் குருசங்கா் தெரிவித்தது:
இப்புதிய சிடி ஸ்கேனா், உடலுறுப்புகளை குறைந்த நேரத்தில் ஸ்கேன் செய்து உயா்தர படங்களை வழங்குகிறது. இந்த நவீன ஸ்கேனரிலிருந்து குறைவான கதிா்வீச்சு மட்டுமே வெளிப்படுகிறது. சிடி ஸ்கேன் அனுபவத்தை முழுமையாக மாற்றுகிற நோக்கத்துடன் செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த ஸ்கேனரில் பயன்படுத்தப்படுகின்றன. டெல்டா பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு இங்கு நிறுவப்பட்டிருக்கும் சிடி ஸ்கேனா் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்றாா் குருசங்கா்.
மருத்துவமனையின் கதிா்வீச்சு சிகிச்சை துறைத் தலைவா் சண்முக ஜெயந்தன் தெரிவித்தது: இந்த ஸ்கேனா் இயக்கத்தின்போது ஏற்படும் சத்தத்தை அகற்றும் திறன் கொண்ட இந்த இயந்திரம், தேவைப்படுகிற கான்ட்ராஸ்ட் அளவையும் குறைக்கிறது. ஸ்கேனா் இயந்திரத்துக்கு உள்ளே நோயாளி தங்களது மூச்சை வெளியே விடாமல் அடக்கி வைக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த பரிசோதனையையும் விரைவாக்குகிறது.‘புற்றுநோய் போன்ற நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சிடி ஸ்கேனா்களை பயன்படுத்த முடியும் என்றாா்.
அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளா் ஆா். ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.