பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கழனிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அருண்குமார்(29), விக்னேஷ்(23), பிரகாஷ்(20). தேங்காய் உரிக்கும் கூலித்தொழிலாளர்களான மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியூரில் உள்ள விக்னேஷ் உறவினர் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர் கொடுத்து விட்டு கழனிக்கோட்டை திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரகாஷ் ஓட்டி வந்துள்ளார்.
எதிர் திசையில் பேராவூரணி அருகேயுள்ள மணக்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்தி(26) ஒலி பெருக்கி அமைப்பாளர், அவரிடம் வேலை செய்யும், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் சுப்பிரமணியபுரம்- விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்( 25) செண்பகப் பாண்டியன் ( 26) ஆகிய மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊமத்தநாடு பகுதியில் பொங்கல் விழாவிற்காக மைக் செட் அமைத்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க- செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத்: நாளை மறுநாள் தொடக்கி வைக்கிறார் பிரதமர்
கார்த்தி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். பூக்கொல்லையில் இருந்து ஊமத்தநாடு செல்லும் சாலை வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே கழனிக்கோட்டையைச் சேர்ந்த அருண்குமார் ( 29), விக்னேஷ் ( 23)ஆகிய இருவரும் பலியாகினர்.
பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணக்காடு கார்த்தி( 26) பலியானார். பலத்த காயமடைந்த மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலியானவர்களின் சடலங்கள் உடற்கூராய்வுக்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்த அருண்குமாருக்கு திருமணமாகி குழந்தை பிறந்து 20 நாட்களே ஆகியுள்ளது. கார்த்திக்குக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இச்சம்பவம் குறித்து பேராவூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் நடந்துள்ள இந்த துயரச்சம்பவம் பேராவூரணி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.