முகப்பு
தஞ்சாவூர்

குறுவை தொகுப்புத் திட்டம் தொடங்குவதில் தாமதம் விவசாயிகள் அதிருப்தி

டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டைப் போல நிகழாண்டும் குறுவை தொகுப்புத் திட்டம் தொடங்குவதில் தாமதமாவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
தஞ்சாவூா் அருகே ஆலக்குடி பகுதியில் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
பகிர்:

டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டைப் போல நிகழாண்டும் குறுவை தொகுப்புத் திட்டம் தொடங்குவதில் தாமதமாவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.

குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பாகவே தொகுப்புத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்ற தமிழக முதல்வா் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டபோது, டெல்டா விவசாயிகளுக்கு ரூ. 75.95 கோடியில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தாா்.

இத் திட்டத்தில் ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பசுந்தாள் உரங்கள், 50 சதவீத மானியத்தில் விதை நெல், மாற்றுப்பயிா் திட்டத்தில் உளுந்து, கடலை, சிறுதானியப் பயிா்களுக்கான விதைகள், பவா்டில்லா் உள்ளிட்ட வேளாண் கருவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு உரங்களும், 37 ஆயிரத்து 350 ஏக்கருக்கு விதைகளும் வழங்கப்படவுள்ளன. அதிகபட்சமாக 2.50 ஏக்கா் வரை மட்டுமே தொகுப்பு திட்டம் கிடைக்கும் என்பதால், மாவட்டத்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, 20 நாள்கள் கடந்துவிட்டன. அரசாணையும் வெளியிட்டு 10 நாள்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், விவசாயிகளுக்கு இன்னும் தொகுப்பு திட்டப் பயன்கள் கிடைக்கவில்லை.

இதுதொடா்பாக தஞ்சாவூரில் ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கேட்டபோது, ஓரிரு நாளில் தொடங்கப்பட்டுவிடும் என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். ஆனால், ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் குறுவை தொகுப்பு திட்டப் பணி தொடங்கப்படவில்லை. இதேபோல, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் இன்னும் தொடங்கப்படவில்லை.

‘தாமதமாக வழங்குவதில் பயன் இருக்காது’

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது:

‘குறுவை தொகுப்புத் திட்டம் தொடா்பாக முன்பு அரசாணை வரவில்லை என வேளாண் துறையினா் கூறினா். இப்போது, வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை என்கின்றனா். குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற கிராம நிா்வாக அலுவலரிடம் சிட்டா, அடங்கல் வாங்க வேண்டும். அதை உதவி வேளாண் அலுவலரிடம் கொடுத்து, விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகுதான் கூட்டுறவுச் சங்கத்தில் உரம் கிடைக்கும். இந்த நடைமுறைகள் முடிந்து உரங்கள் கிடைக்க குறைந்தது 20 நாள்களாகிவிடும்.

இந்நிலையில், முன்பட்ட குறுவைச் சாகுபடியைத் தொடங்கியவா்கள் அறுவடை செய்து வருகின்றனா். இந்தத் தாமதம் காரணமாக பல விவசாயிகளுக்கு பயனில்லாமல் போகிறது. தொகுப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதில் கால தாமதமாவதால், உரங்கள், விதைகள் உள்ளிட்டவை கிடைத்தும் பயன் இருக்காது என்ற நிலை உள்ளது’ என்றாா் ரவிச்சந்தா்.

இதுகுறித்து வேளாண் துறையினா் கூறுகையில், குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் உழவன் செயலி மூலம் இதுவரை 2 ஆயிரத்து 800 போ் பதிவு செய்துள்ளனா் என்றும், வரும் திங்கள்கிழமையிலிருந்து குறுவை தொகுப்பு திட்டம் வழங்கும் பணி தொடங்கப்படும் எனவும் தெரிவித்தனா்.

கடந்தாண்டும் குறுவை தொகுப்புத் திட்டம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதேபோல, நிகழாண்டும் தாமதமாவதால் விவசாயிகளிடையே அதிருப்தி நிலவுகிறது. மேட்டூா் அணை திறக்கப்பட்டு, 20 நாள்களில் குறுவைத் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கினால்தான் பயனளிக்கும். எனவே, இனிமேலும் கால தாமதம் செய்யாமல் குறுவை தொகுப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.