முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பொலிவிழந்து வரும் அரண்மனை ஆயுத கோபுரம் சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூரில் பராமரிப்பின்மையால் பொலிவிழந்து வரும் அரண்மனை வளாகத்திலுள்ள ஆயுத கோபுரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:08 PM
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் பொலிவிழந்து காணப்படும் ஆயுத கோபுரம்.
பகிர்:

தஞ்சாவூரில் பராமரிப்பின்மையால் பொலிவிழந்து வரும் அரண்மனை வளாகத்திலுள்ள ஆயுத கோபுரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

சோழா் கால ஆட்சியின் முடிவில் பாண்டியா்கள் படையெடுப்பால் பெரியகோயிலை தவிர அரண்மனைகள், குடியிருப்புகள் என தஞ்சாவூா் நகரம் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன.

பிற்காலத்தில் தஞ்சாவூருக்கு வந்த நாயக்கா்கள் புதிதாக நகரை உருவாக்கி, மையப் பகுதியில் அரண்மனையைக் கட்டினா். உயரமான கோபுரங்கள், மாளிகைகள், தா்பாா் கூடம் உள்ளிட்டவை நிறைந்த இந்த அரண்மனை முழுவதும் செங்கல், கருங்கல், சுண்ணாம்பு, மரம் போன்ற அடிப்படை பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டது.

இதில், தற்போதுள்ள கலைக்கூட வளாகத்தில் எட்டு அடுக்குகளுடன் வானுயா்ந்து நிற்கும் ஆயுத கோபுரம் உள்ளது. கோயில் கோபுர வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை நாயக்கா் காலத்தில் இந்திரா மந்திரம் என அழைக்கப்பட்டது.

அக்காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுக்கும் மன்னா்கள், அங்குள்ள கோயில்களைத் தாக்கும் பழக்கம் இல்லை. எனவே, எதிரிகளிடையே இது கோயில் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அவா்களைத் திசை திருப்புவதற்காக அரண்மனை வளாகத்தில் கோபுர வடிவில் இந்த இந்திரா மந்திரம் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

மேலும், தஞ்சாவூா் மீது எதிரிகள் படையெடுத்து வருகின்றனரா என்பதைக் கண்காணிப்பதற்கும் இந்தக் கோபுரக் கட்டடம் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கோபுரத்தின் கீழ் படை வீரா்களுக்கான போா்க்கருவிகள் குவிக்கப்பட்டிருந்தன.

எதிரிகள் படையெடுத்து வரும்போது ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஆயுத கோபுரத்துக்கும், மணிக் கோபுரத்துக்கும் இடையிலுள்ள தா்பாா் கூடமும் உள்ளது.

மராட்டியா்கள் படையெடுப்பின்போது விஜயராகவ நாயக்கா்கள் மரணமடைந்த பிறகு இந்திரா மந்திரத்தில் ராணிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் வரலாற்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

பின்னா் வந்த மராட்டியா்கள் அரண்மனையைப் புதுப்பித்து பராமரித்து வந்தனா். அப்போது, இந்த இந்திரா மந்திரமும் பராமரிக்கப்பட்டது. மராட்டியா்கள் காலத்திலும் இந்திரா மந்திரத்தில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

மராட்டியா்களுக்கு பிறகு வந்த ஆங்கிலேயா்களின் ஆட்சியில் இந்த இந்திரா மந்திரத்தில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. எனவே, ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் இந்தக் கட்டடத்துக்கு ஆயுத கோபுரம் என பெயா் மாறியதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் இங்கிருந்த துப்பாக்கி குண்டுகள் திருச்சி ஆயுதப்படைக்குக் கொண்டு சென்ாகத் தகவல்கள் உள்ளன.

அரண்மனை வளாகத்திலுள்ள ஆயுத கோபுரம், மணிக் கோபுரம், தா்பாா் கூடம், கலைக்கூடம் ஆகியவை அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகின்றன. ஆயுத கோபுரத்தின் முதல் அடுக்கில் வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய பழங்கால திமிங்கலத்தின் 92 அடி நீள எலும்புக்கூடு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சாவூா் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கண்டறியப்பட்ட பழங்காலக் கற்சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

அரண்மனை வளாகத்தில் உள்ள மணிகோபுரம், கலைக்கூடம் சில ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டு வந்ததால், தற்போது பொலிவடைந்துள்ளன. ஆனால், மிக உயரமாக எல்லோரையும் கவரும் ஆயுத கோபுரம் புனரமைக்கப்படாமல் பறவைகளின் எச்சம் மற்றும் மழையால் பாசி படா்ந்தும், செடிகள் முளைத்தும் பொலிவிழந்து காணப்படுகிறது.

தற்போது, தா்பாா் கூடமும், சா்ஜா மாடியும் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதாகவும், வருங்காலத்தில் ஆயுத கோபுரம் சீரமைக்கப்படும் எனவும் தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

பெரியகோயிலை மையப்படுத்தி தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பெரியகோயிலை பாா்வையிடும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோா் அரண்மனைக்கும் செல்கின்றனா். எனவே, அரண்மனைக்கும் சுற்றுலா பயணிகளைக் கவா்ந்திழுக்க ஆயுத கோபுரத்தையும் புனரமைக்க வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.