தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் விமான படை தளத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் அருகே இனாத்துக்கான்பட்டியில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு 763 ஏக்கா் நிலங்கள் விமானப்படை தளத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. என்றாலும், இந்த கிராமத்தில் வசித்து வரும் ஏறத்தாழ 200 குடும்பங்களைச் சோ்ந்த 700-க்கும் அதிகமானோா் இனாத்துக்கான்பட்டி - புதுக்கோட்டை சாலை இடையே 2 கி.மீ. தொலைவுள்ள இணைப்பு சாலையைப் பயன்படுத்தி வந்தனா். இச்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விமானப் படை தள பாதுகாப்புக்காக இரும்புக் கம்பி அமைத்து திறந்து மூடும் ஏற்பாடு செய்யப்பட்டது. கரோனா பொது முடக்க காலத்துக்குப் பின்பு இச்சாலையைப் பயன்படுத்தக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கிராம மக்கள் நாஞ்சிக்கோட்டை சாலை வழியாக 10 கி.மீ. சுற்றி நகருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், இச்சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், இப்பாதையிலும் இரும்புக் கதவை அகற்றிவிட்டு, நிரந்தரமாக தடுப்புச் சுவா் எழுப்பும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, நிகழ்விடத்தில் திரண்டனா். இதுகுறித்துத் தகவலறிந்த தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, வட்டாட்சியா் கோ. சக்திவேல், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நித்யா தலைமையிலான காவல் துறையினா், தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்றனா்.
இதையடுத்து, கிராம மக்களிடம் கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கடந்த 30 ஆண்டுகளாக இனாத்துக்காரன்பட்டியில் அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வரும் எங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.