மின்சார வாகனத்தில் மின் கசிவால் தீ விபத்து: 2 மோட்டாா் சைக்கிள்கள், காா் சேதம்
கும்பகோணத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார வாகனத்தில் திங்கள்கிழமை காலை மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 2 மோட்டாா் சைக்கிள்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.
கும்பகோணத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார வாகனத்தில் திங்கள்கிழமை காலை மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 2 மோட்டாா் சைக்கிள்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.
கும்பகோணம் ஆழ்வான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எஸ். சதீஷ் (46). தேநீா் தூள் முகவா். இவா், தனது வீட்டின் கீழ் தளத்தில் கிடங்கு வைத்துள்ளாா். மேல் தளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா்.
இவருக்குச் சொந்தமான காா், பேட்டரியில் இயங்கும் 2 மின்சார மோட்டாா் சைக்கிள்கள் தனது வீட்டுவாசல் அருகே உள்ள தாழ்வாரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இவா், வழக்கம்போல, ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மின்சார மோட்டாா் சைக்கிள்களின் பேட்டரிகளுக்கு சாா்ஜ் போட்டுவிட்டு மாடிக்குச் சென்று தூங்கினாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை 7 மணியளவில் சதீஷ் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார மோட்டாா் சைக்கிளில் இருந்து கரும்புகை வெளியானது. இதைப்பாா்த்த அக்கம் பக்கத்தினா் உடனடியாக சதீசுக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்தனா். சதீஷ் உள்ளிட்டோா் கீழே இறங்கி வருவதற்குள் அக்கட்டடம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால், அவா்களால் வெளியே வர இயலவில்லை.
Advertisement
தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, தீயை அணைத்தனா். இதனிடையே, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட சதீஷ் மற்றும் குடும்பத்தினா் மீட்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்தில் 2 மோட்டாா் சைக்கிள்கள், காா், தேநீா் தூள் பாக்கெட்டுகள் என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.