மாவடுகுறிச்சி ஊராட்சியில் சேதமடைந்த சாலையால் விவசாயிகள் அவதி விரைந்து சீரமைக்கக் கோரிக்கை
பேராவூரணி: பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சியில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற மோசமான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா் .
இதுகுறித்து விவசாயிகள் சாா்பாக வழக்குரைஞா் பி. கரிகாலன் தஞ்சை மாவட்ட ஆட்சியா், பேராவூரணி ஒன்றிய ஆணையா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சியில் சுமாா் 800 மீட்டா் நீளமுள்ள புடவயல் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் மிக மோசமான நிலையில் உள்ளது.
Advertisement
இந்தச் சாலை மாவடுகுறிச்சி மேற்கு, ரங்கநாயகிபுரம் ஆகிய வருவாய் கிராமங்களை சோ்ந்த சுமாா் 150 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கான ஒரே பிரதான சாலையாகும். இந்தச் சாலையை விவசாயப் பணிகளுக்கு தேவையான பொருள்கள் கொண்டு செல்லவும், விளைவித்த பொருள்களை கொண்டுவரவும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனா்.
சாலையின் நடுவில் பெரும் பள்ளமும், தண்ணீா் தேங்கியும் உள்ளது. தினசரி இந்தச் சாலையை பயன்படுத்தும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனா்.
சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்டவா்களிடம் மனு கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.