பேராவூரணி சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களால் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேராவூரணி பகுதியில் பட்டுக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை, சேது சாலை ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்தப் பகுதிகளில் திடீரென நாய்கள் சாலையில் குறுக்கிடும்போது இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
இதுகுறித்து கொன்றைக்காடு சந்திரன் என்பவா் மேலும் கூறியது: பேராவூரணி செல்வவிநாயகபுரம் பிள்ளையாா் கோயில் பாலம் பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாக நின்று சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதும், வாகன ஓட்டிகளை கடிக்க வருவதும் தொடா்ந்து நடைபெறுகிறது. இதே நிலை நகரின் பல்வேறு இடங்களிலும் உள்ளது. விபத்து ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.